`இந்தக் கொடூரமான பயங்கரவாதத்துக்கு என் கணவரே சாட்சி!'- விமர்சனத்துக்கு சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி பதில் | war can’t bring any permanent solution - mita

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (28/02/2019)

கடைசி தொடர்பு:13:10 (28/02/2019)

`இந்தக் கொடூரமான பயங்கரவாதத்துக்கு என் கணவரே சாட்சி!'- விமர்சனத்துக்கு சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி பதில்

``போர்  ஒரு போதும் தீர்வுகளைத் தராது'' என புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி தெரிவித்துள்ளார்.  

போர்கள்


“போர்களைக் கொண்டாடுபவர்கள், அதில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்... போர்களில் ஈடுபட்டவர்களும் அதைக் கொண்டாட மாட்டார்கள்” சமூக வலைதளத்தில் தற்போது பரவலாக உலாவரும் வாசகம். #saynotowar என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த  நிலையில்தான் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி, `போர், தீர்வுகளைத் தராது' எனக் கூறியதால், சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளார்.  புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களில் பப்லு சாண்ட்ராவும் ஒருவர். 

ஆசிரியையான அவரது மனைவி மிடா சாண்ட்ரா, இந்த சமூக வலைதள விமர்சனம்குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், சமூக வலைதளங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை. போர் குறித்து நான் கூறிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பம் இருக்கும். அனைவருக்கும் அவர்களது கருத்துகளைக் கூறுவதற்கு உரிமையுண்டு. ஒரு ஆசிரியையாக, வரலாற்று மாணவியாக எனக்குத் தெரியும். போர்கள் எப்போதும் நிரந்தரத் தீர்வை கொடுத்ததில்லை என்று. ஒரு மனைவி, தனது கணவனை இழக்கிறார்... தாய், தனது மகனை இழக்கிறார். மகள், தனது தந்தையை இழக்கிறாள். இதை நான் படித்தும் இருக்கிறேன். தற்போது அனுபவமும் கொண்டுள்ளேன். இது ஒரு குடும்பத்துக்கான இழப்பு மட்டுமல்ல, ஒரு தேசத்திற்கான இழப்பும்கூட. போர், ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் சமூகக் கட்டமைப்பையும் கடுமையாகப் பாதிக்கும். 

நான் இந்திய விமானப்படை, கப்பற்படை, ராணுவம் ஆகியவற்றிற்குத் தலைவணங்குகிறேன். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய தாக்குதலுக்குத் தலைவணங்குகிறேன். குடிமக்களுக்குப் பாதிப்பில்லாமல் விமானப்படை நடத்திய தாக்குதலை வரவேற்கிறேன். ஒரு முழுநேரப் போருக்கு எதிராகத்தான் நான் உள்ளேன். தீவிரவாதிகள் நம் தேசத்திற்கும் சமூகத்திற்கும் எதிரிகள். அவர்கள் அழிக்கப்பட வேண்டும். இந்தக் கொடூரமான பயங்கரவாதத்திற்கு என் கணவரே சாட்சி” என்று கூறியுள்ளார்.


[X] Close

[X] Close