`நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிக்கிறோம்!’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் | Pakistan Prime Minister Imran Khan: As a peace gesture we are releasing Wing Commander Abhinandan tomorrow.

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (28/02/2019)

கடைசி தொடர்பு:17:08 (28/02/2019)

`நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிக்கிறோம்!’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

அமைதி நடவடிக்கையாக இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் எனப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருக்கிறார். 

அபிநந்தன்

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவந்த ஜெய்ஷ்- இ-முகமது தீவிரவாதத் தளங்கள் மீது இந்திய விமானப்படைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்திய விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தி, விமானி ஒருவரைப் பிடித்து வைத்திருப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்தது.

இதுகுறித்து விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை, ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகவும், இந்தியப் படைகள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தது. மேலும், இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் இந்தியா தரப்பில் மிக் 21 ரக விமானம் ஒன்றை துரதிர்ஷ்டவசமாக இழந்ததாகவும் குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், போர் ஆபத்தானது என்றும் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது தொடர்பான ஆதாரங்கள் இருந்தால், அதுகுறித்து விசாரணை நடத்தத் தயார் என்றும் அறிவித்தார். அதேபோல், இரு நாடுகள் இடையிலான பிரச்னைகளுக்கு போர் தீர்வாகாது என்று குறிப்பிட்ட அவர், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். 

இம்ரான் கான்

ஜெனீவா ஒப்பந்தத்தின்படி இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானை வலியுறுத்தி வந்தன. அதேபோல், நிபந்தனைகள் எதுவுமின்றி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் எனப் பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், நல்லெண்ண அடிப்படையில் இந்திய வீரர் அபிநந்தனை நாளை விடுவிக்க இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருக்கிறார்.  

அவர் பேசுகையில், ``அனைத்து பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். கர்தார்பூர் எல்லையை நாங்கள் திறந்தும், இந்தியாவிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. புல்வாமா தாக்குதல் நடந்தபோது, 30 நிமிடத்தில் நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டோம். இந்தியா ஏதேனும் செய்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம் எனச் சொல்லியிருந்தேன். இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சை மீறிவிட்டது. நல்லெண்ண அடிப்படையில் நாளை இந்திய விமானியை விடுவிக்கிறோம். தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும், பாகிஸ்தான் பேச தயாராகவே இருக்கிறது. புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவுடன் பேச நாங்கள் தயாராக இருந்தோம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசிய இம்ரான் கான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவரான ஷெபாஸ் ஷரிஃபும் அசீஃப் அலி ஜர்தாரியும் உடன் இருந்தனர். இம்ரான் கானின் இந்த முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 

அவர் மேலும் பேசுகையில், ``அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே இரு நாடுகளின் ஸ்திரத்தன்மையைக் காப்பாற்றவே விரும்புகிறோம். போர் என்பது ஒரு தேர்வு அல்ல; அது நமது பேச்சுவார்த்தைகளின் தோல்வி. புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் நாங்கள் ஆதாரங்களை மட்டுமே இந்தியாவிடம் கேட்டோம். தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய கோப்புகளை எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். ஆனால், இரண்டு நாள்களுக்கு முன்னரே தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். எங்களால் முடியும் என்பதை வெளிப்படுத்தவே பதில் தாக்குதல் நடத்தினோம். இந்தியாவில் எந்தவிதமான சேதாரத்தையும் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் பொறுப்பான முறையில் இதைக் கொண்டுசெல்ல விரும்புகிறோம்’’ என்று பேசினார்.
 


[X] Close

[X] Close