`தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான்; பலியானவர்கள் விவரம் குறித்து கூற முடியாது!’ - இந்திய விமானப் படை | We Are Fully Prepared To Respond To Any Provocation From Pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 20:06 (28/02/2019)

கடைசி தொடர்பு:20:19 (28/02/2019)

`தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான்; பலியானவர்கள் விவரம் குறித்து கூற முடியாது!’ - இந்திய விமானப் படை

முப்படை அதிகாரிகள்

``அனைத்துப் பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். கர்தார்பூர் எல்லையை நாங்கள் திறந்தும், இந்தியாவிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. புல்வாமா தாக்குதல் நடந்தபோது, 30 நிமிடத்தில் நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டோம். இந்தியா ஏதேனும் செய்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம் எனச் சொல்லியிருந்தேன். இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சை மீறிவிட்டது. நல்லெண்ண அடிப்படையில் நாளை இந்திய விமானியை விடுவிக்கிறோம். தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகள் குறித்தும், பாகிஸ்தான் பேசத் தயாராகவே இருக்கிறது. புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவுடன் பேச நாங்கள் தயாராக இருந்தோம்’’  என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்தார்.

விமானப்படை

பாகிஸ்தான் ராணுவம் பிடித்து வைத்துள்ள இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்பட உள்ள நிலையில், டெல்லியில் முப்படை அதிகாரிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப்பேசினர். அப்போது அவர்கள்,``2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது. இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. பாகிஸ்தானுடைய F16 ரக விமானம் இந்தியாவுக்குள் நுழைந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இந்திய ராணுவம் அனைத்துக்கும் பதிலடி கொடுக்கத் தயாராகத்தான் இருக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. பயங்கரவாத முகாம்கள் மீதான எங்கள் தாக்குதல் தொடரும்.

பாகிஸ்தான் விமானங்கள் எல்லையைத் தாண்டி அத்துமீறி தாக்குதல் நடத்தின. விமானப்படை தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. இந்திய நிலைகளைக் குறி வைத்தே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. எனினும் அந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அப்போது இந்திய விமானம் ஒன்று துரதிர்ஷ்டவசமாக தகர்க்கப்பட்டது. இந்திய விமானி பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டார். பாகிஸ்தான் படைகள் இல்லாத பகுதியில்தான் அவர் கீழே விழுந்துள்ளார். அதன் பிறகே பாகிஸ்தான் படைகள் அவரை சிறைப்பிடித்துள்ளன. எனினும் அவரை விடுவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. அவர் விடுதலை செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிகாரிகள்

பாகிஸ்தானிய விமானம் ஊடுருவியதை தடுக்க ஐ.ஏ.எஃப் போராளிகள் பணியமர்த்தப்பட்டனர். பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த விமானங்கள் குண்டுகளை வீசினாலும், அவை இந்திய ராணுவத் தளங்களில் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். குடிமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அமைதியையும், நாட்டின் ஸ்திரத்தன்மையைக் காப்பாற்றத்தான் இந்திய ராணும் இருக்கிறது. இந்திய படைகளை தாக்கி அழிக்க பாகிஸ்தான் முயன்றது” என்றனர்.

தொடர்ந்து விமானப்படை அதிகாரி ஆர்.ஜி.கே கபூரிடம், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்டதற்கு, ``தீவிரவாதத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை. அதில், பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கை குறித்து சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. நாங்கள் என்ன செய்ய நினைத்தோமோ, அதை செய்து முடித்துள்ளோம்” என்றார். 


[X] Close

[X] Close