`சல்யூட்!’ -விமானத்தில் அபிநந்தன் பெற்றோர்களை நெகிழ வைத்த பயணிகள் #ViralVideo | IAF pilot Abhinandan Varthaman’s parents to leave for Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (01/03/2019)

கடைசி தொடர்பு:13:27 (01/03/2019)

`சல்யூட்!’ -விமானத்தில் அபிநந்தன் பெற்றோர்களை நெகிழ வைத்த பயணிகள் #ViralVideo

பாகிஸ்தான் அரசால் இன்று விடுதலை செய்யப்படவுள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வரவேற்பதற்காக, அவரது பெற்றோர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன்

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக பாகிஸ்தானில் இயங்கி வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படைகள் அதிரடி தாக்குதலை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றைச் சுட்டுவீழ்த்தி, விமானி ஒருவரை சிறைபிடித்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனின் வீடியோ ஒன்றும் வெளியானது. இதனைத்தொடர்ந்து, அபிநந்தனை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது. ஜெனீவா ஒப்பந்தத்தின்படி இந்திய விமானியைப் பத்திரமாக விடுவிக்க வேண்டும் என்றும்  உலக நாடுகள் பலவும் வலியுறுத்தின. 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், `நல்லெண்ண அடிப்படையில் இந்திய வீரர் அபிநந்தன் விடுவிக்கப்பட்டு, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்’ என்று அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் லாகூரில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, இந்திய தூதரக அதிகாரிகள் அபிநந்தனை மும்பை அல்லது டெல்லி விமானநிலையத்துக்கு அழைத்து வருவார்கள். இந்தச் சூழலில், தங்களுடைய மகனை வரவேற்பதற்காக அபிநந்தனின் தந்தை வர்த்தமான், தாயார் ஷோபனா நேற்று இரவு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர். 

விமானத்தில் அபிநந்தனின் தந்தை வர்த்தமான், தாயார் ஷோபனா ஆகியோருக்கு விமானப்பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் விமானத்தில் ஏறியதும் கைத்தட்டியும் சிலர் வணக்கம் செலுத்தியும் வரவேற்றனர். இந்தக்காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

 

 


[X] Close

[X] Close