திருவனந்தபுரம் விமான நிலைய டெண்டரில் ஊழல்... அதானியிடம் ஒப்படைக்க கேரள முதல்வர் எதிர்ப்பு! | Don't Give Thiruvanthapuram Airport To Adani: Pinarayi Vijayan To PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (02/03/2019)

கடைசி தொடர்பு:12:21 (02/03/2019)

திருவனந்தபுரம் விமான நிலைய டெண்டரில் ஊழல்... அதானியிடம் ஒப்படைக்க கேரள முதல்வர் எதிர்ப்பு!

டெண்டர் பிரிக்கப்படும் முன்னரே அதானி நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளதாகச் செய்திகள் வெளியாகிவிட்டது. திருவனந்தபுரம் விமான நிலையத்தை கேரள தொழில் வளர்ச்சிக்கழகமான கே.எஸ்.ஐ.டி.சி ஏற்கெனவே பராமரித்து வருகிறது. இந்த நிலையில், ஏலத்தில் அதானி வெற்றி பெற்றுள்ளதாகக் கூறப்படுவதெல்லாம் நாடகம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

விமான நிலையங்களைப் பராமரிப்பதற்காக விடப்பட்ட ஏலத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானியிடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

அதானி உடன் மோடி

அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கௌகாத்தி ஆகிய 6 விமான நிலையங்களை மேம்படுத்திப் பராமரிப்பதற்கான பணிகளைத் தனியாரிடம் விட முடிவுசெய்த இந்திய விமான நிலைய ஆணையம், இதற்கான டெண்டரைக் கோரியிருந்தது. 

இதில், 32 நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது ஏலத் தொகையைக் குறிப்பிட்டிருந்தன. இந்த நிலையில், கௌகாத்தி விமான நிலையம் தவிர்த்து, இதர விமான நிலையங்களுக்கான டெண்டர்கள் திறக்கப்பட்டதில், மற்ற நிறுவனங்களைவிட குறைந்த விலையைக் குறிப்பிட்டிருந்த கௌதம் அதானி தலைமையிலான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், 5 விமான நிலையங்களுக்கான ஏலத்தையும் வென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஏலத்தில் பங்கேற்ற பிற நிறுவனங்களைக் காட்டிலும் அதானி நிறுவனம் அதிகமான விலையைத் தருவதாகக் குறிப்பிட்டிருந்ததால், அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், இந்த டெண்டரில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்த பினராயி விஜயன், `பிரதமர் மோடிக்குத் தெரிந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே, விமான நிலையத்தைப் பராமரிப்பதில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத அதானிக்கு திருவனந்தபுரம் உள்ளிட்ட 5 விமான நிலையங்களைப் பராமரிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ என கடந்த 25-ம் தேதி செய்தியாளர்களிடம் கூறினார். 

``இன்றுதான் (பிப்ரவரி 25) டெண்டர் பிரிக்கப்பட உள்ளது. ஆனால், அதற்கு முன்னரே அதானி நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகிவிட்டது. திருவனந்தபுரம் விமான நிலையத்தைக் கேரள தொழில் வளர்ச்சிக்கழகமான கே.எஸ்.ஐ.டி.சி ஏற்கெனவே பராமரித்து வருகிறது. இந்த நிலையில், ஏலத்தில் அதானி வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுவதெல்லாம் நாடகம்’’ என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். 

விமான நிலையம்

இதனிடையே, திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கான ஏலத்தில், அதானி நிறுவனம் பயணி ஒருவருக்கு 168 ரூபாய் தருவதாக குறிப்பிட்டிருந்ததாகவும், ஆனால் கேரள அரசின்  கே.எஸ்.ஐ.டி.சி135 ரூபாய் குறிப்பிட்டிருந்ததாகவும், அதற்கு அடுத்தபடியாக ஜி.எம்.ஆர் நிறுவனம் 63 ரூபாய் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், ஏலத்தில் வென்றதால் அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய 5 விமான நிலையங்களின் பராமரிப்பு பணிகள் அதானியின் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 

ஆனால், திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானியிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்திப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``உடனடியாக நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, திருவனந்தபுரம் விமான நிலைய பராமரிப்புப் பணியை, அதைச் செய்வதற்கென்றே கேரள அரசால் ஏற்படுத்தப்பட்ட கேரள தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்கப்பட்டால் மத்திய, மாநில ஆகிய இரண்டு தரப்பு நலன்களும் பாதுகாக்கப்படும். விமான நிலையத்தைப் பராமரிப்பதில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத அதானி நிறுவனம் அதற்கான உரிமையை எப்படிப் பெற்றது என்பது எனக்கு வியப்பாக உள்ளது. கேரளாவில் உள்ள கொச்சி மற்றும் கன்னூர் விமான நிலையங்களைப் பராமரிக்க கேரள அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் சிறப்பாகவே செய்து வருகிறது. 

திருவனந்தபுரம் விமான நிலையத்துக்காகக் கேரள அரசு 635 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளது. 2005-ம் ஆண்டு மேலும், 23.57 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியது. இது தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், எதிர்காலத்தில் விமான நிலையம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்புக்கு ஏற்ப, அதைக் கேரள அரசுக்குப் பங்காக ஒதுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பினராயி விஜயன்

`திருவனந்தபுரம் விமான நிலையத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேரள உயர் நீதிமன்றத்தை கே.எஸ்.ஐ.டி.சி ஏற்கெனவே அணுகியது. அதை விசாரித்த நீதிமன்றம், டெண்டர் தொடர்பான எந்த ஒரு முடிவும் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரே இறுதி செய்யப்பட வேண்டும் எனக் கூறியுள்ளதையும் தாங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்’ என அந்தக் கடிதத்தில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். 

விமான நிலையங்களைப் பராமரிப்புக்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியிருப்பதும், திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானியிடம் ஒப்படைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, அகமதாபாத் விமான நிலையத்துக்கான ஏலத்தில், பயணி ஒருவருக்கு மாதாந்தர கட்டணமாக 85 ரூபாய் தருவதாக ஜி.எம்.ஆர் என்ற நிறுவனம் குறிப்பிட்டிருந்த நிலையில், பயணி ஒருவருக்கு 177 ரூபாய் தருவதாகக் குறிப்பிட்டிருந்த அதானி நிறுவனம், ஏலத்தில் வெற்றி பெற்றது. இதேபோன்று லக்னோ விமான நிலையத்துக்கு ஏ.எம்.பி கேப்பிட்டல் என்ற நிறுவனம் 139 ரூபாயைக் குறிப்பிட்டிருந்த நிலையில், 171 ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்த அதானி நிறுவனம், அந்த ஏலத்தைக் கைப்பற்றியது. இதேபோன்றே இதர விமான நிலையங்களுக்கான ஏலத்திலும் அந்த நிறுவனம் வென்றுள்ளது. கௌகாத்தி விமான நிலையத்துக்கான டெண்டர் மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. 

தற்போதைய ஏல வெற்றி மூலம், மேற்கூறிய 5 விமான நிலையங்களையும், அடுத்த 50 ஆண்டுகளுக்கான பராமரிக்கும் உரிமையை அதானி நிறுவனம் பெற்றுள்ளது. இதன்மூலம், அதானி குழுமம் முதல் முறையாக விமானப் போக்குவரத்துத்துறைக்குள் நுழைகிறது. கடந்த 2014 முதல் 2018-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த நிறுவனம் காற்றாலை மின் உற்பத்தி, சோலார் மின் உற்பத்தி, மின் விநியோகம் மற்றும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகிய 4 புதிய துறைகளில் காலடி எடுத்துவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close