`தாய் மண்ணில் கால் வைத்தார் அபிநந்தன்' - மக்கள் உற்சாக வரவேற்பு! | Pakistan released indian airforce pilot abhinandan

வெளியிடப்பட்ட நேரம்: 21:26 (01/03/2019)

கடைசி தொடர்பு:21:34 (01/03/2019)

`தாய் மண்ணில் கால் வைத்தார் அபிநந்தன்' - மக்கள் உற்சாக வரவேற்பு!

பாகிஸ்தான் வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார். இதையடுத்து, இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானை தொடர்புகொண்டனர். இந்தியாவிலிருந்து சிறப்பு விமானம் அனுப்பிவைப்பதாகவும் அபிநந்தனை அதில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டதாகவும் இதற்குப் பாகிஸ்தான் தரப்பு மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. வாகா எல்லையில் அபிநந்தனை விடுவிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

வாகா எல்லை

 பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இன்று மதியம் அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்படுவார் என்று கூறினார். ராவல்பிண்டி ராணுவ முகாமில் வைத்து அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் முழுஉடல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அபிநந்தன் முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர். இதன்பின்னர் ராவல்பிண்டி ராணுவ முகாமிலிருந்து விமானம் மூலம் அபிநந்தன் லாகூருக்கு அழைத்து வரப்பட்டார்.

அபிநந்தன்

அங்கிருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வந்தனர். விமானி அபிநந்தனை அழைத்துச் செல்ல வாகா எல்லையில் ஏராளாமான இந்தியர்கள் குவிந்துள்ளனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் எல்லையில் காத்திருந்தனர். தேசியக் கொடிகள் ஏந்தியபடி இளைஞர்கள் பலரும் அங்கு குழுமியிருந்தனர். பாகிஸ்தான் அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் விமானி அபிநந்தனை ஒப்படைப்பதற்கு முன் பல்வேறு எழுத்து நடைமுறைகளை மேற்கொண்டனர். இதையடுத்து, வாகா எல்லைக்கு வந்தபின் அவருக்கு, முழு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து அவரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது. இதையடுத்து, நீண்ட நேர காத்திருப்புக்குப்பின் அபிநந்தன் தாய் மண்ணில் காலடி எடுத்து வைத்தார். மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து அவர் என்ன நடந்தது என்பது குறித்து பேசிய வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. அதில், `விமானத்திலிருந்து நான் பேராஷூட் மூலம்  பாகிஸ்தானில் ஒரு பகுதியில் குதித்துவிட்டேன், அங்கு சூழ்ந்திருந்த மக்கள் என்னை தாக்கினார்கள். அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது நான் அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றேன். அப்போது கடுமையாக தாக்கினார்கள் அதன் பின்பு, அந்தக் கூட்டத்தின் தலைவன் ஒருவன் வந்தான் அவன் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் அளித்தான். சம்பவ இடத்துக்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் வந்தனர். என்னை அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்பு மருத்துவமனையில் அனுமதித்தனர், மேலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர்'' என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

 


[X] Close

[X] Close