``85 விநாடி வீடியோவில் 19 `கட்’டுகள்” -அபிநந்தனை ஒப்படைக்கும் முன் பாக்., வெளியிட்ட சர்ச்சை வீடியோ | Abhinandan made to record video by Pakistan before release

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (02/03/2019)

கடைசி தொடர்பு:11:50 (03/03/2019)

``85 விநாடி வீடியோவில் 19 `கட்’டுகள்” -அபிநந்தனை ஒப்படைக்கும் முன் பாக்., வெளியிட்ட சர்ச்சை வீடியோ

பால்கோட் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி காலை, இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த தாக்குதலில், இந்திய விமானப்படையின் MiG 21 ரக விமானம் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்துள்ளது. அதில்  இருந்த இந்திய விமானி அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறைபிடித்தனர்.

அபிநந்தன்

இதனால், இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியது. அவரை விடுவிக்க வேண்டும் என இந்தியா உள்பட உலகநாடுகள் பலவும் வலியுறுத்தின. பிறகு, அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாக, நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, லாகூரில் இருந்து வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்துவரப்பட்டார் அபிநந்தன். முன்னதாக, நேற்று பிற்பகல் இந்திய விமானி விடுவிக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், சில நடைமுறைகள் காரணமாக அவரை விடுவிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டு, இறுதியாக இரவு 9 மணியளவில் அவர் வாகா எல்லைக்கு அழைத்துவரப்பட்டார்.

அபிநந்தன்

அபிநந்தனை விடுவிப்பதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாக, அவர் பேசிய வீடியோ ஒன்று பாகிஸ்தான் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது.  அவரை விடுவிக்கத் தாமதமானதற்கு இந்த வீடியோவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. சுமார் 85 விநாடி ஓடும் இந்த வீடியோவில், தான் எப்படி விமானத்தில் இருந்து வெளியேறினேன்.  அதன் பிறகு நடந்த விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் அபிநந்தன்.  “நான் இலக்கைத் தேடிவந்தபோது, உங்கள் (பாகிஸ்தான்) விமானப்படை என்னை சுட்டுவீழ்த்தியது. விமானம் சேதமடைந்த பிறகு, நான் அதிலிருந்து வெளியேறிவிட்டேன். பின்னர், அங்கிருந்த ஒரு கும்பல் என்னைத் தாக்கியது. அப்போது, அங்கு வந்த இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றினர். பாகிஸ்தான் ராணுவத்தினர் என்னிடம் மிகவும் சிறந்த முறையில் நடந்துகொண்டனர். நான் அவர்களின் நடவடிக்கையால் கவரப்பட்டேன்’ எனப் பேசியுள்ளார்.

அபிநந்தன்

இந்த வீடியோ, தற்போது இது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிக கவனம் ஈர்த்துள்ளது. அதில், அபிநந்தன் பேசியவை அனைத்தும் எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 19-க்கும் அதிகமான `கட்'டுகள் (cut)  இருப்பதாகவும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். அதிலும் அபிநந்தன், நேற்று இரவு 9 மணியளவில் வாகா எல்லையை அடைந்தார். அதற்கு முன்னதாக, 8:30 மணிக்கு இந்த வீடியோவை  ஏன் பாகிஸ்தான் ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை துப்பாக்கி முனையில் மிரட்டிப் பேசவைத்துள்ளதாகவும் பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். 

முன்னதாக இந்த வீடியோ, பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதிகமாக எடிட் செய்யப்பட்டிருப்பதாக எழுந்த புகாரின் காரணமாக பிறகு நீக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது.


[X] Close

[X] Close