`ஃபரிஹா புக்தி’ -அபிநந்தன் அருகில் நிற்கும் இந்த பாகிஸ்தான் பெண் அதிகாரி யார்? | Fareeha Bugti from Pakistan handed Abhinandan over to the Indian authorities

வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (02/03/2019)

கடைசி தொடர்பு:11:50 (03/03/2019)

`ஃபரிஹா புக்தி’ -அபிநந்தன் அருகில் நிற்கும் இந்த பாகிஸ்தான் பெண் அதிகாரி யார்?

பாகிஸ்தான் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று முன் தினம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.  பிறகு, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, நேற்று பிற்பகல் அவர் இந்தியா வசம் ஒப்படைக்கப்படுவார் என்று கூறினார். ஆனால், இரவு 9 மணியளவில்தான் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வாகா எல்லையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு, அவரை வரவேற்றனர். மேலும், இந்திய விமானப்படையைச் சேர்ந்த இரு அதிகாரிகள், பாகிஸ்தான் அதிகாரிகளிடமிருந்து அபிநந்தனை நடைமுறை விதிகளின்படி அழைத்துச்சென்றனர். பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஒரு பெண் அதிகாரியே அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். நேற்று வெளியான அனைத்து புகைப்படங்களிலும், அபிநந்தனுடன் சேர்ந்து இந்தப் பெண்ணும் வைரல் ஆனார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த அனைவர் மனத்திலும் அந்தப் பெண் யார் எனும் கேள்வி எழுந்திருக்கும்.

பரிஹா புக்தி

அவரைப் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.  டாக்டர்.  ஃபரிஹா புக்தி (Dr. Fariha Bugti) என்ற அந்தப் பெண், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இந்திய விவகாரங்களை கையாளும் பிரிவில் இயக்குநராகச் செயல்பட்டுவருகிறார். அதாவது, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில், இந்திய வெளியுறவு தொடர்பான விவகாரங்களைக் கையாண்டுவருகிறார். இதன் காரணமாகவே, நேற்றிரவு அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க அவர் வாகா எல்லைக்கு வந்துள்ளார்.

பாகிஸ்தானில் சிறைப்பட்டிருக்கும் முன்னாள் இந்திய கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவ் தொடர்பான வழக்கையும் இவரே கவனித்துக்கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 


[X] Close

[X] Close