ஹெலிகாப்டர் விபத்தில் பலியான கேரள மக்களின் ஹீரோ!- ராணுவச் சீருடையில் கதறி அழுத மனைவி  | Wing Commander Sidharth Vashisht, killed in the chopper crash

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (02/03/2019)

கடைசி தொடர்பு:12:00 (02/03/2019)

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான கேரள மக்களின் ஹீரோ!- ராணுவச் சீருடையில் கதறி அழுத மனைவி 

மனைவிபாகிஸ்தான் வசம் இருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வாகா எல்லையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று ஒப்படைத்தனர். அபிநந்தனின் குடும்பத்தினரும் மற்றும் பொதுமக்களும் தங்கள் மகிழ்ச்சியைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் ட்விட்டர் பதிவுகளில், அபிநந்தனின் வரவு மகிழ்ச்சியே அதே வேளையில் விமானப்படை வீரர் சித்தார்த் வஷிஸ்த் மரணம் தங்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகப் பதிவிட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகினர். பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்தனர். இதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காணாமல் போயினர். கேரள வெள்ளத்தின் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவப்படையினர் பயன்படுத்தப்பட்டனர். இந்தப் பணிகளில் விமானப்படையின் விங் கமாண்டர் சித்தார்த் வஷிஸ்த் சிறப்பாகப் பணியாற்றினார். இதற்காக மத்திய அரசு இவரைப் பாராட்டி விருதும் வழங்கியது.

சித்தார்த்


சித்தார்த் வஷிஸ்த் சண்டீகர் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊர் திரும்பியர் புல்வாமா தாக்குதலையடுத்து பணிக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில்தான் கடந்த புதன்கிழமை காஷ்மீர் பட்காம் என்ற இடத்தில் சித்தார்த் வஷிஸ்த் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் விமானி மற்றும் துணைவிமானி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். சித்தார்த் வஷிஸ்த் உடல் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சித்தார்த் வஷிஸ்தின் மனைவி ஆர்த்தியும் விமானப்படையில் பணியாற்றுகிறார். ஆர்த்தி ராணுவ உடையில் கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். இது காண்போரை கண்கலங்கச் செய்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.  

ஆர்த்தி

சித்தார்த் வஷிஸ்த் நான்காம் தலைமுறையாக ராணுவத்தில் பணியாற்றுகிறார். அவரது குடும்பத்தில் ஏராளமானோர் தேசத்திற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். சித்தார்த் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. 
 
 


[X] Close

[X] Close