`அபிநந்தன் மீட்கப்பட்டார்.. ஷாஹாஸ் எங்கே?' - பாகிஸ்தான் மீது விழுந்த சந்தேக ரேகைகள் | An fb post says that the Pakistan air force man died because of their own citizen

வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (02/03/2019)

கடைசி தொடர்பு:11:51 (03/03/2019)

`அபிநந்தன் மீட்கப்பட்டார்.. ஷாஹாஸ் எங்கே?' - பாகிஸ்தான் மீது விழுந்த சந்தேக ரேகைகள்

விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான். கடந்த இரண்டு நாள்களாக இந்தியர்கள் அனைவரின் மனதிலும் ஹீரோவாக வலம் வருகிறார். இவரது விமானம் வீழ்ந்த அதே தினத்தில் மற்றொரு பாகிஸ்தான் விமானமும் வீழ்ந்தது. அதில் பயணித்த பாகிஸ்தான் போர் விமானி ஷாஹாஸ்-யுத்-தின் பலியானார். ஆனால் அவருக்கு உரிய மரியாதையும் கெளரவமும் பாகிஸ்தானில் கிடைக்கவில்லை எனப் பலர் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் அவர் விமானம் விழுந்ததில் சாகவில்லை என்றும், அங்கு இருந்த பாகிஸ்தானியர்களே தவறுதலாக அடித்துக் கொன்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

அபிநந்தன்

சில நேரங்களில் கற்பனையாக எழுதும் கதைகளை விட, நிஜ வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகள் அதிகம் நம்ப முடியாதபடியாக அமைந்து விடுகிறது. அபிநந்தன், ஷாஹாஸ்-யுத்-தின் விஷயத்தில் நடந்திருப்பதும் அதுதான். அபிநந்தன் இந்திய விமானப்படை வீரர். இவரது தந்தையும் முன்னாள் விமானைப்பட அதிகாரி ஆவார். இவர்கள் இருவரும் மிக் ரக விமானங்களில் பறந்தவர்கள். 

ஷாஹாஸ்-யுத்-தின் பாகிஸ்தான் விமானப்படை வீரர். அவரது தந்தையும் முன்னாள் பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஆவார். இவர்கள் இருவரும் f 16 ரக விமானங்களையே பயன்படுத்தி வந்துள்ளனர். அவரது தந்தை கூடுதலாக மிராஜ் ரக விமானத்தையும் பயன்படுத்தியுள்ளார். இந்த ஒற்றுமை பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

மிராஜ் ரக விமானம்

ஆனால் இப்போது, சமூக வலைதளங்களில் வலம் வரும் புதிய தகவல்கள் அதிர்ச்சி தருபவையாக உள்ளன. லண்டனைச் சார்ந்த வழக்கறிஞர் கலித் உமர் என்பவர் பதிவிட்டிருக்கும் பதிவில், ``கடந்த பிப் 27 -ம் தேதி நடைபெற்ற தாக்குதலில் பாகிஸ்தானின் ஷாஹாஸ்-யுத்-தின் இயக்கி வந்த எஃப் 16 ரக விமானம் வீழ்த்தப்பட்டது. ஆனால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் ஷாஹாஸ்-யுத்-தின் சாகவில்லை. உயிருடன்தான் இருந்திருக்கிறார். 

ஆனால், அப்போது அங்கு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த கும்பல், இவர் இந்தியர் எனத் தவறாகப் புரிந்துகொண்டு தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அவர் நிலை குலைந்துபோனார். பின்னர் பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த வீரர் என்று தெரிந்தது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

ஷாஹாஸ்

இது வெறும் முகநூல் பதிவுதானே எனக் கடந்து போக முடியாது. காரணம் இந்தச் சம்பவம் நடைபெற்ற அன்று பாகிஸ்தானின் ராணுவச் செய்தித்தொடர்பாளர் மேஜர் கெனரல் ஆசிஃப் கூறுகையில்,  ``எல்லை தாண்டி அத்துமீறி பாகிஸ்தான் எல்லையில் பறந்த இந்தியாவின் இரண்டு விமானங்கள் தகர்க்கப்பட்டன. அதில் இருந்த இரண்டு வீரர்கள் காயங்களுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ராணுவத்தின் கஸ்டடியில்(அபிநந்தன்) இருக்கிறார். மற்றொருவர் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்” என்றார். ஆனால் இந்தியா தரப்பில் ஒரு வீரர் மட்டுமே காணாமல் போனதாகக் கடைசிவரை தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்திய விமானப்படை தாக்கியதில் ஒரு பாகிஸ்தான் விமானம் வீழ்த்தப்பட்டது எனவும், அதில் இருந்த விமானி பாராசூட்டில் பறந்ததாகவும், அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்ததால் அவர் நிலை குறித்து எங்களுக்கு தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  

அபிநந்தன் விவகாரத்தில் நடந்ததும் கிட்டத்தட்ட இதேதான். அபிநந்தன் கீழே விழுந்ததும் பாகிஸ்தானைச் சேர்ந்த கும்பல் வெறித்தனமாகத் தாக்கியது. அப்போது அங்கு வந்த பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் அபிநந்தனை மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வலம் வந்தது. 

விமானப்படை  வீரர் அபிநந்தன்

ஆனால், முன்னர் 2 இந்திய வீரர்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக சொன்ன ராணுவச் செய்தித்தொடர்பாளர் மேஜர் கெனரல் ஆசிஃப், பின்னர் ஒரு இந்திய வீரர் மட்டுமே பிடிபட்டதாகக் கூறுகிறார். ஆனால் முதலில் இரண்டு பேர் கிடைத்ததாகக் கூறியதற்கு அவர் விளக்கம் ஏதும் தெரிவிக்கவில்லை. 

ராணுவ அதிகாரி குறிப்பிட்ட மற்றொருவர் பாகிஸ்தான் வீரராக இருக்கலாம் எனத் தெரிகிறது. அதாவது முதலில் வீழ்த்தப்பட்ட இரண்டு விமானங்களும் இந்திய விமானங்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேயே பாகிஸ்தானும் தெரிவித்திருக்கலாம். பின்னர் உண்மை தெரிந்த பிறகு பாகிஸ்தான் எண்ணிக்கையை மாற்றியுள்ளது. ஆனால், விளக்கம் ஏதும் தெரிவிக்கவில்லை. 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசும்போதும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய வீரர்கள் எனப் பன்மையில் பேசியிருக்கிறார். இவை அனைத்தும், ஷாஹாஸ்-யுத்-தின் இந்திய விமானி எனத் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவாக நடந்தது எனக் கூறப்படுகிறது.

மேஜர்

இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் இந்திய ராணுவ மேஜர் சுரேந்திர பூனியா, ``இரண்டு விமானப்படை வீரர்கள் தங்கள் நாட்டுக்காகப் போராடினார்கள். ஒருவர் பாகிஸ்தானில் கடைசி நிமிடத்தில் மீட்கப்பட்டார். மற்றொருவர் தனது நாட்டு குடிமக்களாலேயே கொல்லப்பட்டார். நாம் அபிநந்தனைக் கொண்டாடி வருகிறோம். ஆனால் பாகிஸ்தானோ ஷாஹாஸ்-யுத்-தின் யின் தியாகம் குறித்து பேசவே இல்லை. அனைத்து வீரர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்” என்றார். 

இவரது கருத்தை தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பலரும் ஷாஹாஸ்-யுத்-தின் தியாகத்துக்கு உரிய மரியாதை கிடைக்காதது தொடர்பாக தங்களது வருத்தத்தினைப் பதிவு செய்து வருகின்றனர். 


[X] Close

[X] Close