அபிநந்தனுக்கு பாக்., ராணுவம் மனரீதியாக துன்புறுத்தல் - விசாரணையில் தகவல் | Abhinandan Varthaman underwent a string of medical tests

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (03/03/2019)

கடைசி தொடர்பு:10:00 (03/03/2019)

அபிநந்தனுக்கு பாக்., ராணுவம் மனரீதியாக துன்புறுத்தல் - விசாரணையில் தகவல்

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன் நேற்று முன் தினம் இரவு வாகா எல்லை வழியாக இந்தியா வந்தடைந்தார். உலக நாடுகளின் கோரிக்கை படியும் ஜெனீவா ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் அவர் 60 மணி நேரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

கடந்த வெள்ளிக் கிழமை இரவு 9:20 மணிக்கு வாகா எல்லையில் கால் பதித்தார் அபிநந்தன். அங்கிருந்து நேராக டெல்லியில் உள்ள விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அன்றைய இரவே சிகிச்சைகள் வழங்கப்பட்டன. பின்னர் நேற்று நாள் முழுவதும் அவருக்கு பல்வேறு விதமாகச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது அவர் டெல்லியில் உள்ள ஆர்.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அபிநந்தனின் குடும்பத்தினர் நேற்று அவரை நேரில் சந்தித்தனர். மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இரண்டு விமானப்படை அதிகாரிகளும் நேரில் சந்தித்துள்ளனர். தான் பாகிஸ்தானில் இருந்த போது நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அவர்களிடம் விளக்கியுள்ளார் அபிநந்தன். பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை மன ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அபிநந்தன், இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

60 மணி நேரம் அபிநந்தன், பாகிஸ்தானில் இருந்ததால் அவரின் உடலில் ஏதேனும் ஊசி செலுத்தப்பட்டுள்ளதா, இந்தியாவை ரகசியமாகக் கண்காணிக்க அபிநந்தனின் உடலில் சிப் வைக்கப்பட்டுள்ளதா போன்ற பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. பாகிஸ்தானில் இருந்த போது அவர் மன அழுத்தத்திற்கு உள்ளானதால் அதைக் கட்டுப்படுத்த கூலிங் டவுன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஏர் மார்ஷெல் பவன் கபூர் பேசும் போது, “ அபிநந்தன் விமானத்தில் இருந்து வெளியேறி கீழே விழுந்ததால் அவரது உடலில் கண்ணுக்கு தெரியாமல் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அதனால் எம்.ஆர்.ஐ, எக்ஸ்-ரே போன்ற அனைத்து சோதனைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், அபிநந்தனுக்கு முழு உடல் பரிசோதனை செய்து வருகின்றனர். இவை அனைத்தும் முடிய இன்னும் இரண்டு நாள்கள் ஆகும்’ எனக் கூறியுள்ளார். 


 


[X] Close

[X] Close