`ரஃபேல் மட்டும் இப்போது இருந்திருந்தால் நிலைமையே வேறு!’ - மோடியின் வேதனையும்.... ராகுலின் விமர்சனமும் | India Missing Rafale Now Says PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (03/03/2019)

கடைசி தொடர்பு:15:15 (03/03/2019)

`ரஃபேல் மட்டும் இப்போது இருந்திருந்தால் நிலைமையே வேறு!’ - மோடியின் வேதனையும்.... ராகுலின் விமர்சனமும்

ரஃபேல் விமானம் இல்லாததால் ஏற்பட்டுள்ள நிலைமையை இப்போது எதிர்க்கட்சியினர் உணர்ந்திருப்பார்கள் என மோடி பேசியுள்ளார்.

மோடி

அபிநந்தன் விடுதலையால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று `இந்தியா டுடே' நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``விமானி அபிநந்தன் மூன்று நாள்களில் விடுவிக்கப்பட்டதன் மூலம் இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு இருக்கும் செல்வாக்கை தற்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். ரஃபேல் விமானம் இல்லாத நிலையை தற்போது நாடு உணர்கிறது. ரஃபேல் விமானம் தற்போது இருந்திருந்தால் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும். இது தான் ஒட்டுமொத்த நாடும் இப்போது உச்சரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னரும் சரி, இப்போது சரி தங்களின் சுயநலத்துக்க ரஃபேல் விவகாரத்தில் சிலர் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். கட்சிகளின் அரசியலால் இப்போது நமக்குத் தான் பாதிப்பு. 

ராகுல் காந்தி

தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பின்னால் அணிவகுத்து நிற்கும் நிலையில், தீவிரவாதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இங்குள்ள கட்சிகளும், அமைப்புகளும் சந்தேகங்கள் எழுப்புவது வேதனை அளிக்கிறது" என்றார்.

மோடியின் இந்தப் பேச்சு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``உங்களுக்கு வெட்கம் இல்லையா மோடி அவர்களே... ரஃபேல் விவகாரத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாயைத் திருடி, உங்கள் நண்பர் அனில் அம்பானிக்கு கொடுத்தீர்கள். ரஃபேல் ஜெட் இந்தியாவுக்கு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. அபிநந்தன் போன்ற தைரியமிக்க விமானப்படை வீரர்களுக்குக் காலாவதியான விமானங்களைக் கொடுத்து அவர்கள் வாழ்வில் நீங்கள் விளையாண்டு கொண்டிருக்கிறீர்கள்" எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close