குழந்தைக்கு அபிநந்தன் பெயர்! - ராஜஸ்தான் தம்பதியினரின் நெகிழ்ச்சியூட்டும் செயல் #ProudOfYou | rajasthan family names newborn after Wing Commander Abhinandan

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (03/03/2019)

கடைசி தொடர்பு:07:03 (04/03/2019)

குழந்தைக்கு அபிநந்தன் பெயர்! - ராஜஸ்தான் தம்பதியினரின் நெகிழ்ச்சியூட்டும் செயல் #ProudOfYou

சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிய இந்திய விமானப் படை வீரரான அபிநந்தன் வர்த்தமான் நேற்று முன்தினம் அட்டாரி வாகா எல்லையில் இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் நிகல்பூர் மற்றும் சங்கனேர் பகுதிகளில் நேற்று முன்தினம் புதிதாகப் பிறந்த 2 ஆண் குழந்தைகளுக்கு அபிநந்தன் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.

அபிநந்தன்

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நிகல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விமலேஷ் பிந்த்ரா [26]. நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த சில நாட்களாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போா் குறித்த செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்து வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை இவருக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனின் பெயரைச் சூட்ட விமலேஷ் , அவரின் கணவர் மற்றும் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இது குறித்து விமலேஷ் கூறுகையில், ``ஆண் குழந்தை பிறந்தால் கண்டிப்பாக அபிநந்தன் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று என் கணவரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். அபிநந்தனைப் போலவே என் மகனும் எங்கள் குடும்பத்துக்குப் பெருமையைத் தேடித் தர வேண்டும்  என்று விரும்புகிறேன்" என்றார். இதேபோல் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் அதாவது, விமானி அபிநந்தன் தாயகம் திரும்பிய நேரத்தில் இவருக்கு சங்கனேரைச் சேர்ந்த நீலம் என்ற பெண்மணிக்கு ஆண்குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கும் குடும்பத்தினர் அபிநந்தன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

அபிநந்தன்

குழந்தை வளர்ந்தவுடன் விங் கமாண்டர்  அபிநந்தனின் பெருமைகளை அறிந்துகொண்டு உத்வேகமடைந்து அவரைப்  போலவே இவர்களும் நாட்டுக்கும், குடும்பத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே இவர்களது விருப்பமாம். 


[X] Close

[X] Close