`கற்றல் குறைபாடுடைய குழந்தைகளைக் கிண்டல் செய்வதா?’ - மோடிக்கு வலுக்கும் எதிர்ப்பு! | Modi Takes A Dig At Rahul Gandhi By Saying He's Suffering From Dyslexia

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (03/03/2019)

கடைசி தொடர்பு:07:11 (04/03/2019)

`கற்றல் குறைபாடுடைய குழந்தைகளைக் கிண்டல் செய்வதா?’ - மோடிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, கற்றல் குறைபாடுடைய குழந்தைகளை அவமதிக்கும் வகையில் மோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவருக்கு சமூகவலைதளங்களில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மோடி

ஆளும்கட்சியை எதிர்தரப்பும், எதிர்கட்சிகளை ஆளும் தரப்பும், மற்ற கட்சிகளும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொள்வது அரசியலில்  வழக்கமான ஒன்றுதான். ஆனால், அந்த விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் தரம்தாழ்ந்து வைக்கப்படும்போது அது கண்டனங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் உள்ளாகிறது. அந்தவகையில் பிரதமர் மோடியின் சமீபத்திய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி மேற்குவங்கத்தின் காரக்பூர் ஐ.ஐ.டியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 48 மையங்களைச் சேர்ந்த 1,300 மாணவக் குழுக்கள் கலந்துகொண்டனர். `ஸ்மார்ட் இந்தியா ஹெக்கத்தான் 2019’ என்று நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டிருந்தது.

ட்விட்டர்

இந்த கலந்துரையாடலின்போது, மாணவி ஒருவர் டிஸ்லெக்சியா எனும் கற்றல் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தான் செய்யும் உதவிகள் குறித்து மோடியிடம் விளக்கிக் கொண்டிருந்தார். `அறிவார்ந்த மற்றும் படைப்புத்திறனுடைய மாணவர்கள், வாசிப்பு மற்றும் எழுவதில் குறைபாடு உடையவர்களாக திகழ்வதே டிஸ்லெக்சியா நோயின் பாதிப்புகள். இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தான் செய்து வரும் உதவிகள் குறித்து பேசிக்கொண்டிருக்கையில், இடைமறித்த மோடி, `40-50 வயதுடைய குழந்தைகளுக்கும் இதுபோன்ற பாதிப்பு உண்டாகுமா?’ என்றதும் மாணவர்கள் அனைவரும் சிரிக்கத் தொடங்கினர். அவர் ராகுல் காந்தியை மறைமுகமாக சாடியது மாணவிக்கு புரியவில்லை. தொடர்ந்து `இவ்வகையான பாதிப்பு 40-50 வயதுடையவர்களுக்கும் வரும்’ என்றார். இதைக்கேட்ட மோடி, `அப்படியிருந்தால் அவர்கள் தாய் மிகவும் சந்தோஷப்படுவார்’ என்று கிண்டலடித்தார். மோடியின் இந்தப் பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. டிஸ்லெக்சியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயின் தாக்குதலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள கடுமையாகப் போராடி வருகின்றனர். குறைந்தபட்சம் அவர்களுக்கான மரியாதையைக் கொடுங்கள். அவர்களை கொச்சைப்படுத்துவது போல மோடி பேசியுள்ளார். இது வெட்கக்கேடானது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். `கற்றல் குறைபாடுடைய குழந்தைகளை அவமதிக்கும் செயல் இது. `தரம் தாழ்ந்த செயல் இது!’ என்று விமர்சித்து வருகின்றனர்.

 

 

 


[X] Close

[X] Close