`300 தீவிரவாதிகள் பலியானதாக நாங்கள் சொன்னோமா?’ -மத்திய அமைச்சர் அலுவாலியா மறுப்பு | central minister ahluwalia refuses 300 terrorists died in balakot air attack

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (04/03/2019)

கடைசி தொடர்பு:08:30 (04/03/2019)

 `300 தீவிரவாதிகள் பலியானதாக நாங்கள் சொன்னோமா?’ -மத்திய அமைச்சர் அலுவாலியா மறுப்பு

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், 300 தீவிரவாதிகளுக்கும் குறையாமல் இறந்ததாக இந்திய ஊடகங்கள் வெளியிடும் செய்தியை மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா மறுத்துள்ளார்.

மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி பட்டறையை, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அதிகாலை இந்திய விமானப்படையின் விமானங்கள் தகர்த்து எறிந்தன. இத்தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தளபதி யூசுப் அசார் உட்பட 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்தி பரவியது. தீவிரவாதிகள் தாக்கப்பட்டதை உறுதி செய்த இந்திய அரசாங்கம், எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் பலியான முக்கியத் தலைவர்கள் யார் என்கிற விவரத்தை இதுவரையில் வெளியிடவில்லை. 
 

இந்த நிலையில், கடந்த மார்ச் 2 -ம் தேதி மேற்கு வங்க மாநிலம் சில்குரியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா, ``கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறித்து பிரதமர் மோடியோ, அரசாங்க செய்தி தொடர்பாளர்களோ இதுவரையில் எதுவும் கூறவில்லை. ஊடகங்களில்தான் 300, 400 பேர் இறந்ததாகத் தகவல் வெளியிடுகிறார்கள். பாலகோட் விமானப்படை தாக்குதலுக்குப் பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் கூட, எவ்வளவு பேர் இறந்தனர் என்று கூறவில்லை. ஏன், எங்கள் கட்சித் தலைவர் அமித் ஷா எங்காவது இறந்தவர்களின் எண்ணிக்கையை கூறியிருக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ``பாகிஸ்தானுக்கு நமது ராணுவத்தின் பலத்தை உணர்த்தவே தாக்குதல் நடத்தப்பட்டது. மற்றபடி உயிர்ப்பலி ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் அரசுக்கு இல்லை'' என்றார். இதைத் தொடர்ந்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சர் அலுவாலியா, ``எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். எங்காவது 300 தீவிரவாதிகள் இறந்தார்கள் என்று மத்திய அமைச்சர்களோ, அரசு செய்தி தொடர்பாளர்களோ கூறியிருக்கிறோமா? ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு அரசு எப்படிப் பொறுப்பேற்க முடியும்?" என்று தனது கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

அதிகாலை 3 மணிக்குப் பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் ஊடுருவி, 12 போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில், 300 முதல் 400 தீவிரவாதிகள் துவம்சம் ஆகிவிட்டதாக தகவல் பரவி வரும் நிலையில், அதற்கு நேர்மாறாக மத்திய அமைச்சர் ஒருவரே கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. அலுவாலியா பேட்டியளித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சி.பி.எம். கட்சி, ``தீவிரவாதிகளின் முகாம்களை அழித்துவிட்டதாக பறைசாற்றிய மத்திய அரசு, இப்போது பின்வாங்குகிறதா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளது. 

இந்திய விமானப்படையின் பாலகோட் தாக்குதலில், நான்கு பள்ளங்களும், ஒரு பாகிஸ்தானியருக்கு காயம் ஏற்பட்டதைத் தவிர, யாரும் இறக்கவில்லை என்று அல்ஜசீரா, பி.பி.சி., ராய்டர்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்ள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், தாக்குதலில் முகாம்கள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அதை வெளியிடுவது குறித்து ஆட்சியாளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.


[X] Close

[X] Close