முறைகேடு.. விஷ ஊசி.. அறையில் இருந்த 2-வது கதவு! -டெல்லி பெண் மருத்துவர் மரணத்தில் நிலவும் மர்மம் | 28-yr-old doctor found dead at delhi Hospital, family calls for probe

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (04/03/2019)

கடைசி தொடர்பு:10:50 (04/03/2019)

முறைகேடு.. விஷ ஊசி.. அறையில் இருந்த 2-வது கதவு! -டெல்லி பெண் மருத்துவர் மரணத்தில் நிலவும் மர்மம்

டெல்லி தனியார் மருத்துவமனையில் 28 வயது பெண் டாக்டர் மர்மமான முறையில் இறந்துகிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் அஸ்தா முஞ்சால்

மேற்கு டெல்லி பகுதியைச் சேர்ந்த மருத்துவ தம்பதி உதய் திங்காரா - அஸ்தா முஞ்சால். உதய் திங்காரா டெல்லியில் குரு தேக் பகதூர் மருத்துவமனையில் மருத்துவராகவும், அஸ்தா முஞ்சால் மேற்கு பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள மகாராஜா அக்ராசென் மருத்துவமனையிலும் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பணிக்குச் சென்ற அஸ்தா முஞ்சால் மறுநாள் அதிகாலை 6 மணியளவில் அவரது அறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது சாவில் மர்மம் உள்ளது எனச் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மேற்கு டெல்லி போலீஸ் கமிஷனர் கூறுகையில், ``அஸ்தா முஞ்சால் ஒரு நியூராலஜி டாக்டர். நியூராலஜி டாக்டர்கள் ஓய்வு அறையில் அஸ்தா இறந்துகிடப்பதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று அதிகாலை 5.50 -க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்று விசாரணை நடத்தினோம். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் நள்ளிரவு 12.15 வரை வேலை பார்த்துக்கொண்டிருந்த அஸ்தா சரியாக 12.18 -க்கு மருத்துவர்கள் அறைக்குள் நுழைகிறார். அதன்பிறகு அதிகாலை 4.30 -க்கு ஒருவர் அஸ்தா இருந்த அறையின் கதவை தட்டுகிறார். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. 

உதய் திங்காரா - அஸ்தா முஞ்சால்

பின்னர் செக்யூரிட்டிகள் அதிகாலை 5.15 -க்கு வந்து கதவை உடைத்துத் திறந்துள்ளார். இந்தக் காட்சிகள் சிசிடிவியில் இருக்கின்றன. அஸ்தா உடலின் அருகே ஒரு ஊசியும் இருந்தது. கூடவே அவர் உடலில் ஊசி செலுத்தியதற்கான அடையாளமும் இருக்கிறது. இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற யூகத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். எனினும் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்த விவரங்கள் வந்த பிறகே உண்மை தெரிய வரும்" என்றார். போலீஸ் கமிஷனர் இப்படிக்கூற மருத்துவர் அஸ்தாவின் உறவினர்கள்  வேறுமாதிரியாக கூறியுள்ளார்கள். 

இதுகுறித்து அவரது உறவினர் ஒருவர் கூறுகையில், ``இந்த மருத்துவமனையில் 11 மாதமாக அஸ்தா வேலை பார்த்து வருகிறார். இந்த காலங்களில் மருத்துவமனைகளில் சில முறைகேடுகள் நடப்பதை அவர் பார்த்தார். அதற்கு எதிராகக் குரல்கொடுத்து வந்தார். இதே சிந்தனையில் இருந்ததால் கடந்த சில மாதங்களாக அவர் மன உளைச்சலில் இருந்தார்" என்றனர். இதேபோல் அவரது தந்தை கூறுகையில், ``அஸ்தா இறந்துகிடந்த ஓய்வு அறையின் கதவு உடைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அதை ஏன் உடைத்தார்கள் என்று தெரியவில்லை. அந்த அறைக்கு இன்னொரு கதவும் இருக்கிறது. இப்படி இருக்கையில் அதை ஏன் உடைக்க வேண்டும். அவர் சாவில் மர்மம் இருக்கிறது. பிரேதப் பரிசோதனையை வேறு ஒரு மருத்துவக்குழு முன்பு நடத்த வேண்டும்" என்றவர் இதுதொடர்பாக துணை ஆட்சியரிடம் புகார் கடிதம் ஒன்றையும் அளித்துள்ளனர். 

டாக்டர் அஸ்தா முஞ்சால்

இதுகுறித்து பேசியுள்ள மருத்துவமனை நிர்வாகமோ, ``நாங்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் ஏதோ விஷ ஊசியைச் செலுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் எந்தவித ஆய்வுக்கும், விசாரணைக்கும் நாங்கள் தயார். இதுதொடர்பாக நாங்களே ஐந்து நபர் விசாரணைக்குழுவை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர். முன்னதாக அஸ்தா மரணம் குறித்து பேசிய அவரின் தாயார், ``அஸ்தாவுடனும், அவரின் கணவருடனும் இரவு விருந்துக்குச் செல்லலாம் எனத் திட்டமிருந்தோம். ஆனால் அதற்குள் இப்படியாகிவிட்டது" என வேதனை தெரிவித்தார். இதற்கிடையே, இறந்துபோன அஸ்தாவின் கண்களை தானம் செய்ய முன்வந்துள்ளனர் அவரது குடும்பத்தினர். ``இந்த கண் தானம் மூலமாவது எங்கள் மகளை அடிக்கடி பார்த்துக்கொள்வோம்" என அவர்கள் கண்ணீர் மல்கக் கூறினர். மருத்துவர் அஸ்தாவின் மரணம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நேரத்தில் இன்று அவரது பிரேதப் பரிசோதனை நடக்க இருக்கிறது. அதன்முடிவில் அவர் எப்படி இறந்தார் எனத் தெரிந்துவிடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close