பறக்கும் சவப்பெட்டியைக் கொண்டு `எஃப்-16' விமானத்தை அபிநந்தன் வீழ்த்தியது எப்படி? | Abhinandan is first IAF pilot to down an F-16’

வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (04/03/2019)

கடைசி தொடர்பு:11:31 (04/03/2019)

பறக்கும் சவப்பெட்டியைக் கொண்டு `எஃப்-16' விமானத்தை அபிநந்தன் வீழ்த்தியது எப்படி?

பிநந்தன் இப்போது வேறு ஒரு வகையில் ஹீரோவாகி இருக்கிறார். நான்காம் தலைமுறை விமானமான `எஃப்-16' ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய முதல் இந்திய போர் விமானி என்ற பெயரை அவர் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 26-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி மையம் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அடுத்த நாளே  பதிலடியாக இந்திய வான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீச முயன்றன. பாகிஸ்தான் போர் விமானங்களில் ஜே.எஃப் 17 எஸ், மிராஜ்-5 மற்றும் எஃப் -16 ரக விமானங்கள் இருந்தன. 

அபிநந்தன்

பாகிஸ்தான் போர் விமானத்தை வானிலேயே மறித்த இந்திய போர் விமானங்கள் அவற்றை  விரட்டிச் சென்றன. இந்தியாவைத் தாக்க வந்த 12 பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான் எல்லையைக் கடக்கும் சமயத்தில், அபிநந்தனின் மிக்- 21 ரக விமானத்தில் ரேடாரில் எஃப்- 16 ரக விமானம் சிக்கியுள்ளது. இதனால்தான், அபிநந்தன் மீண்டும் இந்திய வான் எல்லைக்குள் திரும்பி வர  விரும்பவில்லை. எஃப்.-16 சிக்கியதும் தான் அதை லாக் செய்து விட்டதாகவும் ஆர்- 73 ரக ஏவுகணையை செலக்ட் செய்திருப்பதாகவும் தன் வானொலி தகவலில் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதான் அபிநந்தனின் மிக்-  21 ரக விமானத்தில் இருந்து கடைசியாக அனுப்பப்பட்ட வானொலி தகவலாக கூறப்படுகிறது. அபிநந்தனால் சுடப்பட்ட `எஃப்-16' பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது . அதேவேளையில் மற்றொரு பாகிஸ்தான் போர்  விமானத்தால் மிக் -21 சுடப்பட்டதும், விமானத்திலிருந்து எஜெக்ட் செய்து பாராசூட் வழியாக அபிநந்தன் தரை இறங்கியிருக்கிறார். அதற்குப் பிறகு நடந்த விஷயங்கள் அனைவருக்கும் தெரிந்த கதை. அபிநந்தன் எப்.-16 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதை முன்னாள் விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் எஸ்.கிருஷ்ணசாமி உறுதிப்படுத்தியுள்ளார். 

அபிநந்தன் ஓட்டிய மிக் ரக விமானம்

மிக் 21 ரக விமானத்தைக் கொண்டு எஃப்-16 ரக விமானத்தைச் சுடுவது, கரி இன்ஜின் ரயில் ராஜ்தானி ரயிலை முந்தியது போன்றது. அபிநந்தனின் விடா முயற்சியால் பாகிஸ்தான் தற்போது வேறு ஒரு சிக்கலில் சிக்கியுள்ளது. எஃப்.16 ரக விமானம் அமெரிக்காவின் லாக்கீட் மாட்டின் நிறுவனத்தின் தயாரிப்பு. இந்த விமானத்தையும் இதில் இருந்து ஏவக் கூடிய அம்ரான் (AIM-120) ரக ஏவுகணையையும் எதிரி  நாட்டைத் தாக்க பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எஃப்.- 16 ரக விமானத்தை வழங்கியது. தற்போது, இந்தியாவுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்திய ஆதாரங்களை இந்தியா அமெரிக்காவிடம் வழங்கி கடும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும். ஒருவேளை, பாகிஸ்தானிடம் இருந்து எப்.-16 ரக விமானத்தைத் திருப்பி வாங்க வேண்டும் அல்லது எஃப்-16 ரக விமானத்தை எங்களுக்கும் தர வேண்டுமென்று இந்தியா  கோரிக்கை விடுக்கலாம். 

தற்போது, இந்திய விமானப்படையில் சுகோய் --30 எம்.கே.ஐ, மிக்-29 மிராஜ்- 2000 மிக் -21 பிசான் ரக விமானங்கள் உள்ளன. இதில், சுகோய் மட்டுமே சற்று அதிநவீனமானது. மற்றவை எல்லாம் பழைய ரக விமானங்கள்.  மிக் ரக விமானங்களுக்கு 'பறக்கும் சவப்பெட்டி' என்ற பெயரே உண்டு. இந்த விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும். ஏராளமான விமானிகளைப் பலி கொண்டுள்ளன. உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. பாலகோட் மீது தாக்குதல் நடத்திய மிராஜ்- 2000 ரக விமானங்கள் பாகிஸ்தானின் எப்.-16 ரக விமானங்களின் ரேடாரில் தென்பட்டிருந்தால் உடனடியாக சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கும்.

இந்தளவுக்குப் பழைய ரக விமானங்களை இன்னும் பயன்பாட்டில் வைத்துக்கொண்டுள்ள இந்திய விமானப்படை பல ஆண்டு காலமாக நவீன போர் விமானங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.  இப்போது, ரஃபேல் இருந்தால் கதை வேறு மாதிரி ஆகியிருக்கும் என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close