நேர்மை, ரத்தத்தில் ஊறியது... வட இந்திய 'சகாயம்' 52-வது முறையாக டிரான்ஸ்ஃபர்! | Ashok Khemka IAS transferred for 52nd time in 27-year career

வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (04/03/2019)

கடைசி தொடர்பு:16:04 (04/03/2019)

நேர்மை, ரத்தத்தில் ஊறியது... வட இந்திய 'சகாயம்' 52-வது முறையாக டிரான்ஸ்ஃபர்!

மிழகத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி யார் என்றால், உடனே சகாயம் என்பார்கள். அதற்கு, அவரின் நேர்மையே காரணம். ஆனால், நேர்மையாகவும் உண்மையாகவும் கடமையைச் செய்தால், அரசியல்வாதிகளால் ஐஏஎஸ் அதிகாரிகள் பந்தாடப்படுவது வாடிக்கைதானே. சகாயம் தன் பணிக் காலத்தில் 27 முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்.  இவரைப்போலவே  வட இந்தியாவில்,  யாருக்கும் அடிபணியாத ஒரு சகாயம் இருக்கிறார்.  அவரின் பெயர், அசோக் கெம்கா. யாருக்கும் அடங்க மாட்டார். சட்டத்தின்படி எது சரியோ அதை மட்டுமே அசோக் கெம்கா செய்வார். அரசியல்வாதிகள் இவரிடத்தில் வாலாட்ட முடியாது. 'நேர்மை, தன் ரத்தத்தில் ஊறியது'  என்று சொல்வது அசோக் கெம்காவின் வழக்கம். 

அசோக் கெம்கா ஐஏஎஸ்

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா மீது  நில ஆக்கிரமிப்புப் புகார் உண்டு.  கடந்த 2012- ம் ஆண்டு, ராபர்ட் வத்ராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்துக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எஃப் நிறுவனத்துக்குமிடையேயான ஒப்பந்தத்தை ரத்துசெய்து, அதிரடி காட்டியவர். கடைசியாக, இவரை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செயலராகத் தூக்கியடித்தனர்.  இந்தத் துறையில் பெரியதாக வேலை இருக்காது. வழக்கமாக ஒரு துறையில் 6 மாத காலம்தான் அசோக் கெம்கா பணியாற்றுவார். தன் பணிக் காலத்திலேயே அதிகபட்சமாக இங்குதான் அசோக் கெம்கா 15 மாதங்கள் பணியாற்றினார். அசோக் கெம்காவுக்கு என்று தனி அலுவலகம்கூட கொடுக்காமல் அலைக்கழித்த கதையும் நடந்தது. தற்போது,  அசோக் கெம்கா 52- வது முறையாக மீண்டும் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார். இந்த முறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு முதன்மைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார். 27 வருட சர்வீஸில், 52 முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட ஒரே இந்திய ஐஏஎஸ் அதிகாரி இவர்தான்.

சகாயம் ஐஏஎஸ்

கடந்த 2014- ம் ஆண்டு, ஹரியானாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது. அப்போதிருந்து அசோக் கெம்கா 6 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பணியில் எத்தனை மாதங்கள் இருக்கப்போகிறாரோ! இப்போது எழுந்திருக்கும் கேள்வி, தற்போது அசோக் கெம்காவுக்கு 53 வயதாகிறது. இவருடன் சேர்ந்து மற்றொரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று பெயரெடுத்த அமித் ஜகாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது, இவருடைய 45-வது இடமாற்றம் ஆகும். 

`என் வலியும் வேதனையும் அரசியலை சுத்தமாக்கட்டும்' என்று அசோக் கெம்கா அடிக்கடி சொல்வார். நல்ல அதிகாரிகளை அரசியல்வாதிகள் வேட்டையாடுவதுதான் நின்றபாடில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close