அபிநந்தன் மீண்டும் போர் விமானம் இயக்குவாரா... விமானப்படைத் தளபதி சொல்வது என்ன? | depend upon his fitness - IAF chief BS Dhanoa on Abhinandan’s return as fighter pilot

வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (04/03/2019)

கடைசி தொடர்பு:16:54 (04/03/2019)

அபிநந்தன் மீண்டும் போர் விமானம் இயக்குவாரா... விமானப்படைத் தளபதி சொல்வது என்ன?

ந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து இந்தியா திரும்பி மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். மிக்-21 ரக விமானத்திலிருந்து எஜக்ட் செய்து வெளியேறிய அவர், பாராசூட் வழியாகத் தரை இறங்கினார். இதன் காரணமாக, அபிநந்தனுக்குக் கீழ் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் மருத்துவர்களின் முழுக் கண்காணிப்பில் அவர் உள்ளார். விரைவில் போர் விமானம் இயக்க வேண்டுமென்பது அபிநந்தனின் ஆவல். 

அபிநந்தன் குறித்து விமானப்படைத் தளபதி தகவல்

இந்நிலையில், கோவையை அடுத்துள்ள சூலூரில் செய்தியாளர்களுக்கு விமானப்படைத் தளபதி பி.எஸ். தனோவா பேட்டியளித்தார். அப்போது, `அபிநந்தன் மீண்டும் போர் விமானம் இயக்குவாரா என்ற கேள்வி அவரிடத்தில் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த தனோவா, ``அபிநந்தன் போர் விமானம் ஓட்டுவது அல்லது ஓட்ட முடியாமல் போவது அவரின்  உடல் தகுதியைப் பொறுத்தது. விமானத்திலிருந்து எஜக்ட் செய்யப்பட்ட பின் உடல்ரீதியான அவரின் தகுதிகள் ஆராயப்பட்டு வருகின்றன. உடல் தகுதியை எட்டினால் மட்டுமே மீண்டும் போர் விமானத்தின் காக்பிட்டில் அவர் பணி புரிய முடியும்'' என்றார். 

மேலும், `பாகிஸ்தான் பாலகோட்டில் இலக்கை இந்திய விமானங்கள் துல்லியமாகத் தாக்கின. ஆனால், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதைத் துல்லியமாகக் கூற முடியாது' என்றும் விமானப்படைத் தளபதி தெரிவித்தார். 

அபிநந்தன்

அபிநந்தனின் உடலில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு இரு வகையான காயங்கள் உள்ளன. முதுகுத் தண்டுவடத்தின் கீழ்ப் பகுதியில் பாதிப்பு உள்ளது. தரை இறங்கிய பின்னர் அபிநந்தனை பாகிஸ்தானியர்கள் தாக்கியதில் விலா எலும்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர வேறு பெரிய பாதிப்பும் அவரிடத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது. தனக்கு சிகிக்சை அளிக்கும் மருத்துவர்களிடத்தில் விரைவில் மீண்டும் போர் விமானம் ஓட்ட ஆசைப்படுவதாக அபிநந்தன் கூறியுள்ளார். 

இதற்கு முன் கார்கில் போரின் போது இந்திய போர் விமானி நசிகோட்டா, மிக் ரக விமானத்திலிருந்து எஜக்ட் செய்து வெளியேறினார். 18,000 அடி உயரத்திலிருந்து குதித்த நசிகோட்டாவுக்கு முதுகுத் தண்டுவடத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் தரை இறங்கிய இவரையும் அந்நாட்டு ராணுவம் பிடித்தது. உடல்ரீதியாக மனரீதியாக நசிகோட்டாவை சித்ரவதை செய்த பாகிஸ்தான் 8 நாள்களுக்குப் பிறகு இந்தியாவிடம் ஒப்படைத்தது. தண்டுவட பாதிப்பு காரணமாக 3 ஆண்டுகள் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இயக்க நசிகோட்டா அனுமதிக்கப்படவில்லை. பிறகு ராணுவ சரக்கு விமானங்களை இயக்கும் பணிக்கு நசிகோட்டா மாற்றப்பட்டார். 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close