மூளைச்சலவை இங்கே... உடல்திறன் பயிற்சி அங்கே! - ஜெய்ஷ் அமைப்பு செயல்படுவது எப்படி?  | pakistan Govt takes control of Jaish HQ in Bahawalpur

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (05/03/2019)

கடைசி தொடர்பு:15:10 (05/03/2019)

மூளைச்சலவை இங்கே... உடல்திறன் பயிற்சி அங்கே! - ஜெய்ஷ் அமைப்பு செயல்படுவது எப்படி? 

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி மையத்தை இந்திய போர் விமானங்கள் தாக்கியதும், பால்கோட் என்ற பெயர் இந்தியாவில் பாப்புலராகிவிட்டது. ஜெய்ஷ்  இ முகமது அமைப்பைப் பொறுத்தவரை பால்கோட் பயிற்சி மையம் சும்மா ஒரு சாம்பிள்தான். ஜெய்ஷ் இ அமைப்பின் தலைமையகம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவால்பூரில் உள்ளது. இதன் பெயர், 'ஜமாத் இ மஸ்ஜித் சுபனல்லா '. பகவால்பூர், பாகிஸ்தானின் 11-வது பெரிய நகரம். சுமார் 8,00,000 மக்கள் தொகை கொண்டது. ஜெய்ஷ் அமைப்பில் சேருபவர்கள், முதலில் பகவால்பூர் தலைமையகத்தில்தான் மூளைச்சலவை செய்யப்படுவார்கள். பின்னரே, பால்கோட் முகாமுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். பால்கோட்டில் அவர்களுக்கு  உடல்திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். பகவால்பூர் தலைமையகத்தில் 600 பேர் வரை தங்கி பயிற்சி பெறலாம். 70 பயிற்சியாளர்கள் உள்ளனர். 

ஜெய்ஷ் அமைப்பின் தலைமையகம்

ஜெய்ஷ் அமைப்பின் தலைமையகம், சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட கோயில் மாதிரி கட்டப்பட்டுள்ளது. உள்ளே,  சொகுசு வீடுகளும் நவீன ஜிம், நீச்சல் குளம், நவீன சமையல் அறைகளும் உள்ளன. இங்கேதான், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார், சகோதரர்கள், உறவினர்கள் வரை அத்தனை பேரும் வசித்தனர். புல்மாவா தாக்குதலையடுத்து, ஜெய்ஷின் பகவால்பூர்  தலைமையகத்தைத் தாக்கவே முதலில் இந்திய விமானப்படை திட்டமிட்டது. ஆனால், கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்தவேண்டியது இருந்தது. பாகிஸ்தான் போர்  விமானங்கள் இடைமறிக்கவும்  வாய்ப்பிருந்தது. பின்னர்தான், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகேயுள்ள  பால்கோட் பயிற்சி மையத்தை இந்திய விமானப்படை இலக்காகத் தேர்ந்தெடுத்தது. 

கடந்த 2012 -ம் ஆண்டு,  ஜெய்ஷ் இ முகமது அமைப்பு  தலைமையகக் கட்டட கட்டுமானப் பணியைத் தொடங்கியது. நவீன வசதிகளுடன் கட்டி முடிக்க 3 ஆண்டுகள் பிடித்தன. பஞ்சாப் மாகாண அரசும் பாகிஸ்தான் அரசும் இதைக் கட்ட ஜெய்ஷ் இ அமைப்புக்கு நிதியுதவி செய்தன. ஜெய்ஷ் இ அமைப்பின் முக்கிய கூட்டங்கள் இங்கேதான் நடத்தப்படும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் அசார் பயிற்சிபெறும் இளைஞர்களிடத்தில் 'ஜிகாத்' குறித்து உரையாற்றுவார். 

ஜெய்ஷ் அமைப்பின் தலைமையகம்

ஜெய்ஷ் இ அமைப்புக்கு பாகிஸ்தான் மட்டும்தான் நிதியுதவி செய்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். பல இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் இந்த அமைப்புக்கு நிதி கிடைத்துவருகிறது. நிதியுதவி, ஆயுத உதவிகளைத் தடுப்பதற்காகவே,  மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா போராடிவருகிறது. ஐ.நா அமைப்பில் ஒவ்வொரு முறை தீர்மானம் கொண்டுவரும்போதும் சீனா தன் 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்துவிடுகிறது. 

புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்  அமைப்பு ஈடுபட்டதற்கான ஆதாரங்களை இந்திய அரசு பாகிஸ்தானிடம் அளித்துள்ளது. தொடர்ந்து, பகவால்பூர் ஜெய்ஷ் இ முகமது  அமைப்பின் தலைமையகத்தை பஞ்சாப் மாகாண அரசு, தன் கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close