`பயங்கரவாதிகளின் அடுத்த தாக்குதல் திட்டம்!’ - இந்திய கடற்படைத் தளபதி அதிர்ச்சித் தகவல் | Navy chief Admiral Lanba warns of sea-borne terror attack

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (05/03/2019)

கடைசி தொடர்பு:17:47 (05/03/2019)

`பயங்கரவாதிகளின் அடுத்த தாக்குதல் திட்டம்!’ - இந்திய கடற்படைத் தளபதி அதிர்ச்சித் தகவல்

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, கடல் மார்க்கமாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய கடற்படைத் தளபதி சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

கடற்படை தளபதி

ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் சம்பவ இடத்திலே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை சார்பில் பாகிஸ்தானில் உள்ள பால்கோட் பகுதியில் பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குலின்போது, இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கினார். இதையடுத்து ஜெனிவா ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் அதிகாரிகள் கடந்த 1-ம் தேதி அவரை இந்தியா வசம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இந்திய கடற்படைத் தளபதி சுனில் லன்பா இந்தோ-பசிபிக் பிராந்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``கடல் மார்க்கமாக பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதற்காக அவர்கள் பயிற்சி பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படிப் பார்க்கும்போது, கடந்த சில ஆண்டுகளில் பசிபிக் பிராந்தியம் அதிக அளவிலான தாக்குதல்களைச் சந்தித்துள்ளது. உலக அளவில் பயங்கரவாத சக்திகள் அதிகரித்து வருகின்றன. எப்படியிருந்தாலும் இந்தியா இதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது” என்றார். 


[X] Close

[X] Close