`பால்கோட்டில் 35 சடலங்களை பாகிஸ்தான் ராணுவம் அள்ளிச் சென்றது' - இத்தாலி செய்தியாளர் தகவல்  | Pak army carried away 35 dead bodies from Balakot - says Italian journalist

வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (05/03/2019)

கடைசி தொடர்பு:19:42 (05/03/2019)

`பால்கோட்டில் 35 சடலங்களை பாகிஸ்தான் ராணுவம் அள்ளிச் சென்றது' - இத்தாலி செய்தியாளர் தகவல் 

பால்கோட்டில் இந்திய விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் இறந்ததாகவும் இல்லையென்றும் சொல்லப்படுகிறது. இந்தியத் தரப்பு தங்களிடம் செயற்கைக் கோள் வழியாக எடுத்த புகைப்படங்கள் இருப்பதை ஆதாரமாகச் சொல்கிறது. ஆனால்,  அந்தப் புகைப்படங்களை வெளியிடுவது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் பாலகோட் மீது தாக்குதல்

இந்நிலையில், இத்தாலியைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரான்சிஸ்கா மரினோ வீயான் சேனலிடம் கூறுகையில், ``பால்கோட்டில் இந்தியா நடத்திய  தாக்குதலில் 40 முதல் 50 பேர் வரை இறந்திருக்கலாம் 35 முதல் 40 பேர் வரை காயமடைந்துள்ளனர்'' என்றார். இறந்தவர்களில் 12 பேர் மிகவும் இள வயதினர். இந்தியா நடத்திய தாக்குதலில் பலியானவர்களில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சியாளர் முஃப்தி மொயின் மற்றும் வெடிகுண்டு நிபுணர் உஸ்மான் கனி ஆகியோரும் அடக்கம் என்றும் மரினோ கூறியுள்ளார். இது 100 சதவிகிதம் நம்பத்தகுந்த தகவல் எனவும் மரினோ தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்திய பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியிருந்த பிரான்சிஸ்கா மரினோ, ``தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாகவும் 35 சடலங்களை எடுத்துச் சென்றதாகவும் மரினோ எழுதியிருந்தார். மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்குள் போலீஸார் அனுமதிக்கப்படவில்லை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவர்களிடத்தில் கூட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மரினோ அதே கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே பால்கோட் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை இறந்ததாகப் பேட்டியளித்ததும்... மரங்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீசியதாகவும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close