`வரிசையில் நில்லுங்கள்' - உள்துறை அமைச்சரை அதிரவைத்த கல்லூரி மாணவி! | Girl opposes special dharshan for Karnataka Home Minister MB Patil In Temple

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (06/03/2019)

கடைசி தொடர்பு:14:17 (06/03/2019)

`வரிசையில் நில்லுங்கள்' - உள்துறை அமைச்சரை அதிரவைத்த கல்லூரி மாணவி!

கோயில்களில் அரசியல்வாதிகள் முக்கிய பிரமுகர்களுக்கு வரிசை என்பது கிடையாது. அவர்கள் பலரும் வரிசையில் நின்று சாமி கும்பிடாமல் நேரடியாகச் சென்று ஸ்பெஷல் தரிசனம் செய்வது தற்போது வழக்கமாகிவிட்டது. அப்படி வரிசையில் நின்று சாமி கும்பிடாத முக்கிய பிரமுகரை இளம்பெண் ஒருவர் அதிரவைத்த சம்பவம் நடந்துள்ளது. இப்படி ஒரு தர்மச் சங்கடமான சம்பவம் நடந்தது கர்நாடக உள்துறை அமைச்சர் எம்பி பாட்டீலுக்குதான். 

எம்பி பாட்டீல்

கர்நாடக உள்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் விஜயபுரா பகுதியில் உள்ள அமரகானத்தீஸ்வர சிவன் கோயிலுக்குச் சென்றார். சிவராத்திரி என்பதால் அவர் சென்ற நேரத்தில் கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் சாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நின்று கொண்டிருக்க, அமைச்சர் பாட்டீலோ விஐபி தரிசனத்தில் சாமி கும்பிடுவதற்காகத் தனது ஆதரவாளர்களுடன் கோயிலுக்குள் சென்றார். அவருக்குக் கோயில் நிர்வாகத்தினர் வழி ஏற்படுத்திக்கொடுத்து கூப்பிட்டுச் சென்றனர். 

எம்பி பாட்டீலுடன் இளம்பெண்

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அங்கிருந்த கல்லூரி மாணவி ஒருவர் அமைச்சர் பாட்டீலை `வரிசையில் நில்லுங்கள். பல மணி நேரமாகப் பக்தர்கள் காத்திருக்க நீங்கள் விதிகளை மீறி இப்படிச் செல்லலாமா' எனக் கேள்வி எழுப்பினார். அவரின் கேள்வியால் அமைச்சர் அதிர்ந்து போனார். அனைத்து பக்தர்களைப் போலவும் வரிசையில் நின்று சாமி கும்பிடுமாறு தொடர்ந்து அந்தப் பெண் வலியுறுத்தினார். பின்னர் அந்தப் பெண்ணிடம் சென்ற அமைச்சர் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், ``இரண்டு அரசு விழாக்களுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. அவற்றைத் தவிர்க்க முடியாது. 

எம்பி பாட்டீலுடன் இளம்பெண்

நான் வேகமாகச் செல்லவில்லை என்றால் விமானத்தைப் பிடிக்க முடியாது. அதனால்தான் சிறப்பு தரிசனத்தில் சென்றேன்" என விளக்கம் கொடுத்து சமாதானப்படுத்தினார். அவரின் விளக்கத்தை அடுத்து அமைச்சர் சிறப்பு தரிசனம் செய்ய அந்தப் பெண் ஒத்துக்கொண்டார். அமைச்சர் என்றும் கூட பாராமல் தன்னைக் கேள்வி கேட்ட பெண்ணை பாராட்டிய எம்பி பாட்டீல் அந்தப் பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தச் செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

 

news & photo credits: indiatimes

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close