தேர்தல் அடையாள மையில் அடங்கியிருப்பது என்ன...? | What are the significance of ink used for voters in elections

வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (06/03/2019)

கடைசி தொடர்பு:12:27 (16/03/2019)

தேர்தல் அடையாள மையில் அடங்கியிருப்பது என்ன...?

தேர்தல் அடையாள மையில் அடங்கியிருப்பது என்ன...?

வாக்காளர் ஒருவர், தேர்தல் நடைபெறும்போது, பலமுறை வாக்களிக்க முயல்வது, ஏமாற்றுவது போன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்காக, வாக்களித்ததன் அடையாளமாக சம்பந்தப்பட்ட வாக்காளரின் ஆள்காட்டி விரலில் `அடையாள மை' வைக்கப்படுகிறது. எளிதில் அழிக்க முடியாத இந்த அடையாள மையை ஒருமுறை விரலில் வைத்தால் அது மறைவதற்கு குறைந்தது ஒரு மாதம்வரை ஆகலாம்.

தேர்தல் அடையாள  மை

தேர்தலில் கள்ள ஓட்டுகள் பதிவாவதைத் தடுக்க அழியாத அடையாள மையைத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தி வருகிறது. வாக்குப்பதிவின்போது, வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் இந்த அடையாள மையைக் கர்நாடக மாநில அரசு நிறுவனமான `மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட்' (Mysore Paints and Varnish Limited) தயாரிக்கிறது. தரமான, எளிதில் அழியாத மையை உற்பத்தி செய்வதில் தனித்தன்மை பெற்ற இந்த நிறுவனம், அதை விநியோகிக்கும் அதிகாரம் பெற்றுள்ள ஒரே நிறுவனமாகும். இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்துதான் 'அடையாள மை' ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

தேர்தல் ஆணையம், தேசிய இயற்பியல் சோதனைக்கூடம், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் ஆகியன இணைந்து, அழியாத மையை உற்பத்தி செய்கின்றன. டெல்லியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம், `மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட்' நிறுவனத்துக்குச் சிறப்பு உரிமத்தை 1962-ல் வழங்கியது. 

அடையாள மை

`மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் நிறுவனம்' 1937-ம் ஆண்டு, அப்போதைய மைசூர் ராஜதானியின் மகாராஜாவாக இருந்த நல்வாடி கிருஷ்ணராஜ உடையாரால் மைசூர் 'லாக் மற்றும் பெயின்ட் ஒர்க்ஸ்' - `மைசூர் அரக்கு மற்றும் பெயின்ட் பணி' - என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 1989-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பெயர் `மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட்' என மாற்றப்பட்டது. 1962-ம் ஆண்டு தேர்தல் ஆணையம், மத்திய சட்ட அமைச்சகம், தேசிய இயற்பியல் சோதனைக்கூடம், தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, `மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட்'  நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டது. அதன்படி நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்துக்கும் `அடையாள மை'யை வழங்கும் பொறுப்பை இந்த நிறுவனம் ஏற்றது. மேலும் துருக்கி, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, நேபாளம், கானா, கனடா, கியாரா, லியோன், மலேசியா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் தேர்தலின் போதும், இந்த நிறுவனம் அந்த நாடுகளுக்கு அடையாள மையை ஏற்றுமதி செய்து வருகிறது, 

அடையாளமை

அழியாத மையின் அடையாளங்கள்:

• 2009  நாடாளுமன்றத் தேர்தலில் 10 மி,லி. அளவிலான சுமார் 20 லட்சம் குப்பிகள் பயன்படுத்தப்பட்டன. உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு மட்டும் 2.88 லட்சம் குப்பிகள் அனுப்பப்பட்டன.

• இடது ஆள்காட்டி விரலில் நகமும், தோலும் சேருமிடத்தில் அடையாள மை இடப்பட்டு வந்தது. 2006 பிப்ரவரி 1-ம் தேதி முதல் விரலில் ஒரு சிறிய கோடாக அடையாள மை வைக்கப்படுகிறது. இடது ஆள்காட்டி விரலில், நகத்தின் உச்சியிலிருந்து அடிவரையில் இந்தக் கோடு போடப்பட்டு வருகிறது. 

• அடையாள மையில் சில்வர் நைட்ரேட் சேர்ந்திருப்பதால் அதன் மீது சூரிய ஒளியில் உள்ள புறஊதாக் கதிர் படும்போது, தோல் பகுதியில் அது கறையை ஏற்படுத்துகிறது. இந்தக் கறையை உடனடியாக நீக்குவது அவ்வளவு எளிதானதல்ல. விரலின் தோலில் உள்ள செல்கள் மாறும்போதுதான், இந்தக் கறை மறையும். சில்வர் நைட்ரேட்டின் அடர்த்தி ஏழு சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதம்வரை மாறுபடுகிறது.

• ஊதா நிறத்தில் அடையாள மை இருக்கும். 2005 தேர்தலில் தென் அமெரிக்காவில் அடங்கிய சூரினாம் என்ற நாடு ஆரஞ்சு நிற மையைப்  பயன்படுத்தியது.

• மற்றவர்களுக்காக வாக்களிக்கும்போது இந்த அடையாள மை வாக்களிப்பவரின் இடது கை நடுவிரலில் இடப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close