பாகிஸ்தானுக்கு இனி இஸ்ரேல் பாணியில் பதிலடி... மாறும் இந்திய வியூகம்! | Israel to play a big role in India’s conflict with Pakistan?

வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (06/03/2019)

கடைசி தொடர்பு:15:48 (06/03/2019)

பாகிஸ்தானுக்கு இனி இஸ்ரேல் பாணியில் பதிலடி... மாறும் இந்திய வியூகம்!

காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலிய சிறப்பு கமாண்டோ படையினரால், தீவிரவாத முகாம்களை விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வியூகங்கள் மூலம் அழிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இந்திய ராணுவ கமாண்டோ படையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான இந்திய வீரர்கள், இஸ்ரேல் சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு இடையே, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்துவருகின்றன. இந்நிலையில், மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடக்கும்பட்சத்தில், கடந்த காலங்களைப் போன்றல்லாமல், தற்போது பின்பற்றத் தொடங்கியுள்ள இஸ்ரேல் பாணியில் இறங்கி அடிக்கும் தாக்குதல் வியூகங்களையே தொடர்வது என்று, இந்தியா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இஸ்ரேல் பாணி தாக்குதல்

கடந்த காலங்களில் தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு இந்தியாவுக்குள் பாகிஸ்தான் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் மிக முக்கியமானவை, 1999, டிசம்பர் 24-ம் தேதி காட்மாண்ட் நகரிலிருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கந்தஹாருக்குக் கடத்தப்பட்டது; 2001, டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதல்; 2008, நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 

இந்த மூன்று சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு, இந்தியாவில் மிகவும் கொந்தளிப்பான சூழல் காணப்பட்டது. கிட்டத்தட்ட பாகிஸ்தான் மீது ராணுவத் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற அளவுக்கு ஆவேசக் குரல்கள் எழுந்தன. அப்படித் தாக்குதல் நடத்தினாலும், அதற்கு இந்தியா பக்கம் போதுமான நியாயங்களும் இருந்தன. ஆனாலும், அப்படித் தாக்குதல் நடக்கும்பட்சத்தில் அது முழு அளவிலான போருக்கு வழிவகுத்துவிடும் என்பதாலும், போரினால் இந்தியாவுக்கும் உயிரிழப்போடு பொருளாதார இழப்பும் ஏற்படும் என்பதாலும் இந்தியா தயங்கிக்கொண்டிருந்தது. கூடவே, பாகிஸ்தான் தன்னிடம் உள்ள அணு ஆயுதத்தைக் காட்டியும் மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களும் இந்தியாவின் கைகளைக் கட்டிப்போட்டன. 

இதனால், பாகிஸ்தானுக்கு வசதியாகப் போய்விட்டது. "இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாது. அதிகபட்சம்போனால், தூதரகரீதியில் பல்வேறு நாடுகளிடமும் தாக்குதல் பிரச்னையைக் கொண்டுசென்று, பாகிஸ்தான் தனது மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை ஊக்குவித்துவருகிறது. அதைக் கட்டுப்படுத்த அறிவுறுத்துங்கள் என்று புலம்பும். அதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும், `பயங்கரவாதிகளை ஊக்குவிக்காதீர்கள்' என்று நம்மிடம் சொல்வார்கள். நாமும், `தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு எங்கள் நாடுதான். எங்கள் மண்ணில் தீவிரவாதச் செயல்களுக்கு ஒருபோதும் இடமில்லை' என்று சொன்னால், பிரச்னையின் வீரியம் சில நாளில் காணாமல்போய்விடும். நாம் மீண்டும் இந்தியாவுக்கு எதிரான நிழல் யுத்தத்தைத் தொடரலாம்" என்ற எண்ணத்தில்தான் பாகிஸ்தான் இருந்துவந்தது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் - புல்வாமா தாக்குதல் 

ஆனால், இந்தியா இனியும் தொடர்ந்து அதேபோன்று இருக்காது என்பதை பாகிஸ்தானுக்கு உணரவைத்ததுதான் சர்ஜிக்கல் ஸ்டிரைக். 2016-ம் ஆண்டு  செப்டம்பர் 19-ம் தேதி  ஜம்மு - காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, அதே மாதத்தில் 29-ம் தேதி இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படை, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதிக்குள் சுமார் 2 கிலோமீட்டர்  வரை  ஊடுருவிச் சென்று தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 30-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புல்வாமா தாக்குதல்

இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அப்படி ஒரு தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இந்திய ஊடகங்கள்தாம் அப்படி ஒரு தாக்குதல் நடந்ததாகச் செய்தி வெளியிடுகின்றனவே தவிர, பல உலக நாடுகள் அதை நம்பவில்லை என்றும் சொல்லியது. ஆனாலும், இந்தியா தொடர்ந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் குறித்துப் பேசிவந்ததும், கடந்த செப்டம்பரில் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு தினம் கொண்டாடப்பட்டதும், அது தொடர்பாக பாலிவுட்டில் திரைப்படம் ஒன்று வெளியானதும் பாகிஸ்தானுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தன. கூடவே எல்லைக் கட்டுப்பாடுக் கோட்டுப் பகுதியிலும், பலுசிஸ்தானிலும் பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தொடர்ந்து மிகக் கடுமையான இழப்புகள் ஏற்பட்டன. இதுகுறித்த செய்திகள், ஊடகங்களில் பெரிதாக வெளியாகவில்லை. 

இந்நிலையில்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் நாங்கள் பயந்துவிடவில்லை என்று காட்டுவதற்காக, புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் திட்டமிட்டது. உள்ளூர் தீவிரவாதியைக்கொண்டு தாக்குதல் நடத்தினால், அது உள்நாட்டிலேயே நடந்த தாக்குதலாகவே கருதப்படும். அதை மட்டுமே காரணமாக வைத்து போர் தொடுக்கும் அளவுக்கு இந்தியாவால் செல்ல முடியாது. அப்படி போர் அளவுக்குச் செல்லவேண்டுமானால், அந்தத் தாக்குதல் முன்னர் நடந்த நாடாளுமன்றத் தாக்குதல் அல்லது மும்பைத் தாக்குதல் அளவுக்கு இருக்க வேண்டும் எனக் கருதியது பாகிஸ்தான். 

இந்தியாவுக்குக் கிடைத்த லைசென்ஸ்

ஆனால், பாகிஸ்தான் எதிர்பார்க்காத வகையில் இந்த முறை, புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மண்ணிலேயே பல கிலோமீட்டர் தூரத்துக்கு ஊடுருவிச் சென்று இந்திய விமானப் படை, தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பியது. இந்தத் தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டனவா... இல்லையா, தீவிரவாதிகள் கொல்லப்பட்டனரா... இல்லையா என்பது பற்றிய சந்தேகங்களும் சர்ச்சைகளும் இருக்கின்றன. இது ஒருபுறம் இருந்தாலும், 1971-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத வகையில் அந்த நாட்டின் உள்பகுதிக்குள் சென்று இந்திய விமானப்படை குண்டு வீசிவிட்டு வந்திருப்பது அப்பட்டமான உண்மை.

இதன் மூலம், இந்தியா உலக நாடுகளுக்குச் சொன்ன செய்தி, `இது, தற்காப்புக்காக தீவிரவாத முகாம்கள் மீது நடந்த தாக்குதல்தானே தவிர, பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் அல்ல' என்பதுதான். இது உலக நாடுகளின் மனதில் வெற்றிகரமாகப் பதியவைக்கப்பட்டது. பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவுக்குக்கூட இதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல்போனது. இது, பாகிஸ்தானுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இன்னொரு புறம் தூதரகரீதியாகவும் பல்வேறு நாடுகளுடன் பேசிய இந்தியா, புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் அடங்கிய கோப்புகளை அளித்ததோடு, தனது தாக்குதலையும் நியாயப்படுத்தி, சர்வதேச அரங்கிலிருந்து பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையையும் தீவிரப்படுத்தியது. இந்தச் சூழலில்தான், பாகிஸ்தானும் பதிலடி கொடுப்பதாக நினைத்து காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்கள் மீது எஃப்-16 ரக விமானம் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவமும், அதைத் தொடர்ந்து அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியபோது பாகிஸ்தான் பகுதியில் விழுந்து, அந்த நாட்டின் ராணுவத்தின் பிடியில் சிக்கிய நிகழ்வும் நடந்தன. 

இந்திய விமானப் படையின் பதிலடி

அபிநந்தன் சிக்கியது பாகிஸ்தான் தரப்புக்கு சற்று உற்சாகம் அளித்த நிலையில், அவரை வைத்து நாடகமாட முயன்றதாக விமர்சனங்கள் எழுந்தன. அதே சமயம், இந்தியாவின் பதில் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அனுமானிக்க முடியாமல், உள்ளுக்குள் உதறலெடுத்துப்போயிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மூலம் `அபிநந்தனை உடனடியாக விடுவிக்காவிட்டால், விளைவுகள் வேறுமாதிரி இருக்கும்' என பாகிஸ்தானுக்கு உணர்த்தப்பட்டதைத் தொடர்ந்தே, அவர் விடுவிக்கப்பட்டார் என்றும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், தனது தோல்வியை மறைக்க நல்லெண்ண அடிப்படையில் அவரை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தாலும், புல்வாமா தாக்குதல்  உலக அரங்கில் அதற்கு மீண்டும் தலைக்குனிவை ஏற்படுத்தியதோடு, தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்துக்கு மாறாக இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த எஃப்-16 ரக விமானத்தைப் பயன்படுத்தியதால், அமெரிக்காவுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கும் அது தள்ளப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது.  

மேலும், இனி இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடந்தால், பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கும் என்பதற்கான லைசென்ஸையும் உலக அரங்கில் இந்தியா பெற்றுவிட்டது. ஆகமொத்தத்தில், பாகிஸ்தானின் புல்வாமா திட்டம், அதற்கே வினையாகிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். 

இனி இறங்கி அடிக்கும் இஸ்ரேல் பாணி!

பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியாவின் வியூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கும், இறங்கி அடிக்கும் அணுகுமுறைக்குமான காரணம், சமீபகாலமாக இஸ்ரேல் நாடுடன் இந்திய நாடு காட்டும் நெருக்கமான உறவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அந்த நாடு அளிக்கும் யோசனைகளும், ராணுவ ஒத்துழைப்பும்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மோடி இஸ்ரேலுக்குச் சென்று திரும்பிய பிறகு, கடந்த ஆண்டு முதன்முறையாக இந்தியா வந்த  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, ``2008-ம் ஆண்டில் நடந்த மும்பைத் தாக்குதலைக் குறிப்பிட்டு, தீவிரவாத தாக்குதல்களின் வலியையும் வேதனையையும் இரு நாடுகளும் உணர்ந்துள்ளதாகவும், அதேசமயம் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலிருந்து இந்தியாவும் இஸ்ரேலும் ஒருபோதும் பின்வாங்காது'' என்றும் கூறியிருந்தார். அப்போதே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு எந்த அளவுக்கு நெருக்கமாக உள்ளது என்பது வெளிப்பட்டது. 

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலும், அப்படியான ஒரு இஸ்ரேல் யோசனை அடிப்படையிலானதுதான். காஸா அல்லது சிரியாவில் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் விமானத் தாக்குதல் (இது விமர்சனத்துக்குரியது என்பது தனியாக விவாதிக்கப்படவேண்டிய விஷயம்) பாணியிலானது என்பது, இதுகுறித்த செய்திகளை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினுடன் மோடி

கடந்த பல மாதங்களாகவே இந்தியாவில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா தலைமையிலான அரசுடன் இஸ்ரேல் மிகுந்த நெருக்கம் காட்டுவதற்கு, இருதரப்பிலும் கடைப்பிடிக்கப்படும் இஸ்லாமிய வெறுப்பும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். இந்த நெருக்கம் காரணமாகத்தான், இஸ்ரேலின் ஆயுதங்களை விற்கும் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவாகியுள்ளது. அண்மையில் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்திய விமானப் படையினர் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளும் இஸ்ரேல் தயாரிப்பான `ரஃபேல் ஸ்பைஸ்-2000' என்ற ரகத்தைச் சேர்ந்த குண்டுகள்தான் எனச் சொல்லப்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இஸ்ரேலிடமிருந்து மேற்கொள்ளப்படும் ஆயுதக் கொள்முதலை இந்தியா அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டில் மட்டும் இஸ்ரேலிய விமானப் பாதுகாப்பு, ராடார் கருவிகள் மற்றும் வெடிமருந்துகள், விமானத்திலிருந்து விமானத்தைத் தாக்கும் ஏவுகணைகள் போன்றவற்றை 530 மில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுமட்டுமல்லாது, காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலியச் சிறப்பு கமாண்டோ படையினரால், தீவிரவாத முகாம்களை விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வியூகங்கள் மூலம் அழிப்பது போன்ற பல பயிற்சிகள், இந்திய ராணுவ கமாண்டோ படையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான இந்திய வீரர்கள், இஸ்ரேல் சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். இந்திய ராணுவத்தின் வலிமைமிக்க 45 `கருடா கமாண்டோ' படையினரில், 16 படையினருக்கு இஸ்ரேலின் இரண்டு விமானதளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்திய கமாண்டோ வீரர்கள் பயிற்சி

இந்த அளவுக்கு இந்தியா - இஸ்ரேல் இடையே ராணுவ உறவு நீடிக்கும் நிலையில், மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால், இனி இஸ்ரேல் பாணியிலான தாக்குதலும், அந்த நாட்டின் ஆயுதங்களும்தாம் பாகிஸ்தானுக்கான இந்தியாவின் பதிலடியைத் தீர்மானிக்கும்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close