சம்பள உயர்வு: இந்த ஆண்டு யாருக்கு, எவ்வளவு இருக்கும்? | India Inc employees can expect a salary hike of 9.7% this year: Report

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (06/03/2019)

கடைசி தொடர்பு:16:15 (06/03/2019)

சம்பள உயர்வு: இந்த ஆண்டு யாருக்கு, எவ்வளவு இருக்கும்?

ந்த ஆண்டு, நிறுவனப் பணியாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து மதிப்பீடு செய்யும் 'அப்ரைஸல்'  நடவடிக்கை இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், சராசரி சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு, பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

சம்பள உயர்வு

பணியாளர்களின் ஒரு வருட செயல்பாடு,  நிறுவனத்தில் அவர்களது பங்களிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு  ஊதிய உயர்வு எவ்வளவு அளிக்கலாம் என்பதை மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள். 

இந்த நிலையில், இந்த ஆண்டு இந்திய நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சராசரியாக 9.7 சதவிகிதம் அளவுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படலாம் என ஹெச்.ஆர் எனப்படும் மனித வள ஆலோசனை நிறுவனங்கள்  தெரிவித்துள்ளன. இது, கடந்த ஆண்டில் அளிக்கப்பட்ட 9.5 சதவிகிதத்தைக் காட்டிலும் சற்று அதிகமாகும். 2017-ம் ஆண்டில் 9.3 சதவிகிதம் அளிக்கப்பட்டது. 

அதே சமயம், சிறப்பாகப் பணியாற்றும் 'டாப் பெர்ஃபார்மர்ஸ்'  (Top performers) களுக்கான ஊதிய உயர்வு, 15.6 சதவிகிதம் அளவுக்கு இருக்கலாம் என்றும் ஹெச்.ஆர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

இது தொடர்பாக நாடு முழுவதும் 2 வகையான தொழில் நிறுவனங்களில் 1000-க்கும் அதிகமானவர்களிடம்  நடத்தப்பட்ட ஆய்வின்போது, சாதகமான பொருளாதார கண்ணோட்டம், பொருளாதார வளர்ச்சி இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு, அதிக உள்நாட்டுத் தேவை மற்றும் பணவீக்க அளவு குறைவு போன்றவை காரணமாக, நிறுவனங்கள் அளிக்க முன்வந்த சராசரி சம்பள உயர்வு விகிதம் 9.7 எனத் தெரிய வந்ததாக பெங்களூரைச் சேர்ந்த ஹெச். ஆர் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் உயரதிகாரி  ஜே.எம். ஆன்ட்ரூ தெரிவித்துள்ளார். 

நிறுவனங்களின் லாப கணக்கு

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு சொற்ப அளவுதான் (0.2%) என்றாலும், கடந்த பல ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த அளவுக்கான சம்பள உயர்வே சாதகமான அம்சம்தான் என்று சொல்லும் ஹெச்.ஆர் நிறுவனங்கள், "முன்பெல்லாம் பல நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து, லாப அடிப்படையைக் கணக்கில்கொண்டு, ஊழியர்களுக்கு அதிக சம்பள உயர்வை அளித்து வந்தன. இந்தப் போக்கு இப்போது காணப்படவில்லை. இதற்கு, அத்தகைய நிறுவனங்களின் லாப விகிதம் குறைந்ததும், செலவினங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதுமே காரணம் " என்று தெரிவிக்கின்றன.  

கடந்த காலங்களில், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், இரட்டை இலக்க விகிதத்தில் சம்பள உயர்வை அளித்துவந்தன. ஆனால், அது தற்போது குறைந்துவிட்டது. இந்த ஆண்டில் இணையதள நுகர்வு சேவை அளிக்கும் நிறுவனங்கள் (11.1%), தொழில் சார்ந்த சேவைகள் (11.1%), லைஃப் சயின்சஸ் (10.1%), ஆட்டோமேட்டிவ் (10.1%) மற்றும் நுகர்வுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் (10.1%) என 5 முக்கிய துறைகளில் மட்டுமே இரட்டை இலக்க விகிதத்தில் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்றும், ஹெச். ஆர் நிறுவனங்கள் மேலும் தெரிவிக்கின்றன.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close