மொபைலிலிருந்து வெளிவந்த புகை - அதிர்ச்சியடைந்த இளைஞர்! | Mumbai factory worker’s smartphone explodes in pocket, CCTV footage raises questions on safety

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (06/03/2019)

கடைசி தொடர்பு:19:50 (06/03/2019)

மொபைலிலிருந்து வெளிவந்த புகை - அதிர்ச்சியடைந்த இளைஞர்!

ஸ்மார்ட்போன்

மும்பையில், தொழிற்சாலையில் வேலைசெய்துகொண்டிருந்தவரின் பாக்கெட்டிலிருந்த ஸ்மார்ட்போன் திடீரென வெடித்துள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள், தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. சிசிடிவி காட்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியின்படி, இந்தச் சம்பவம், பிப்ரவரி 28-ம் தேதி நடந்துள்ளது. மும்பையின் புறநகர்ப் பகுதியான சகிநகாவில் (Sakinaka) உள்ள தொழிற்சாலையில், மூன்று பேர் வேலை செய்துகொண்டிருக்கும்போது, திடீரென ஒருவரது பேன்ட் பாக்கெட்டிலிருந்த ஸ்மார்ட்போன் வெடித்து, புகையாக வெளிவருகிறது. அவர், உடனடியாக பாக்கெட்டிலிருந்து ஸ்மார்ட்போனை வெளியே எடுத்து தூக்கி எறிந்துவிட்டு ஓடுகிறார். அவருக்கு முன்பே மற்ற தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியே ஓடிவிட்டனர். ஸ்மார்ட்போன் வெடித்தவரின் தொடைப் பகுதி எரிந்து காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஸ்மார்ட்போன் வெடிப்பு, மீண்டும் ஸ்மார்ட்போன்கள் மீதான சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதற்கு முன்பே சாம்சங், ஜியோமி, ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இவ்வாறு வெடித்துள்ளன. தற்போது அந்த வரிசையில், மோட்டரோலாவும் இணைந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், வெடித்த ஸ்மார்ட்போன் மோட்டரோலா நிறுவனத்தைச் சார்ந்தது எனக் கூறப்படுகிறது. உலகம் முழுக்கவே ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த ஆண்டு ஜுன், டிசம்பர் மாதங்களில் இரண்டு முறை  மும்பையிலேயே ஸ்மார்ட்போன் வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த ஜனவரியில், ராஜஸ்தானில் 60 வயதுடைய முதியவர் ஒருவரின் ஸ்மார்ட்போன் வெடித்ததால் இறந்துவிட்டார்.  ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இதனை நினைவில்கொண்டு, மொபைல் தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.


[X] Close

[X] Close