அரசு நிகழ்ச்சியும் தேர்தல் பொதுக்கூட்டமும் - சர்ச்சையான மோடி வருகை! | CPI condemns Modi over kilambakkam meeting

வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (06/03/2019)

கடைசி தொடர்பு:11:41 (16/03/2019)

அரசு நிகழ்ச்சியும் தேர்தல் பொதுக்கூட்டமும் - சர்ச்சையான மோடி வருகை!

ரசு நிகழ்ச்சி மற்றும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் வந்த பிரதமர் மோடியின் வருகை  சர்ச்சைக்குள்ளாகியுள்ளது 

கிளாம்பாக்கம் கூட்டத்தில் மோடி உள்ளிட்ட தலைவர்கள்

ரயில்வே திட்டங்கள் அர்ப்பணிப்பு, எம்.ஜி. ஆர் பெண்கள் கலைக் கல்லூரியில் எம்.ஜி. ஆர் சிலை திறப்பு என அரசு நிகழ்ச்சிகள் ஒரு புறம் நடக்க, அ.தி.மு.க -  பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற பிரமாண்ட தேர்தல் பொதுக்கூட்டம் என பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்துமுடிந்துள்ளன. அரசு நிகழ்ச்சியும் பொதுக் கூட்டமும் ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளது, தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, அரசு பணத்தைச் செலவழித்து தேர்தல் பொதுக் கூட்டத்தை நடத்துவதாகக் கேள்வி எழுந்துள்ளது. 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "நாடாளுமன்றத் தேர்தல்அடுத்த ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. அரசியல் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு, தேர்தல் பிரசாரப் பணிகள்  தொடங்க உள்ளன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்கிற அரசு விழா மற்றும் அதன் அருகே, தேர்தல் பொதுக் கூட்ட நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இந்த பொதுக்கூட்டத்தில்,  கூட்டணிக்  கட்சித் தலைவர்கள்  பங்கேற்றனர். இதற்காக பிரதமர் வழக்கம்போல தனி விமானத்தில் வருவதோடு, அவருக்கான பாதுகாப்புப் பணியில் பல ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சிகளுக்கு மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது. 

கே.பாலகிருஷ்ணன்

அதே போன்று, மார்ச் 1-ம் தேதியன்று கன்னியாகுமரியிலும் இதுபோன்ற அரசு விழாவுடன் , பா.ஜ.க பிரசார பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தைக் காரணம் காட்டி கட்சி பொதுக்கூட்டம் ரத்துசெய்யப்பட்டது. தமிழகத்தில் கஜா புயலால்  மக்கள்  சிக்கித் தவித்தபோது வராத பிரதமர், அரசு நிகழ்ச்சி என்ற பெயரில் கட்சியின் தேர்தல் பொதுக் கூட்டத்தை நடத்துவது எந்த வகையில் நியாயம்? பா.ஜ.க கூட்டணி அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை, தனியாகக் கூட்டங்களை நடத்தி மேற்கொள்ள வேண்டுமே தவிர, அரசு விழா என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்து, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோரைப் பயன்படுத்தி மேற்கொள்வது கண்டனத்திற்குரியதாகும். இப்போக்கு, ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதாகும்.எனவே, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, மத்திய மாநில அரசுகளின் வரம்பு மீறிய செயல்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார். அதேபோன்று,  சமூக வலை தளங்களிலும் மோடி பங்கேற்ற  நிகழ்ச்சிக்கு கடும் விமர்சனம் எழுந்துவருகிறது. 

 

 


[X] Close

[X] Close