இந்த 22 நகரங்களின் எதிர்காலம் என்னவாகும்? #AirPollution #VikatanInfographics | 22 of the world's 30 most polluted cities are in India

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (07/03/2019)

கடைசி தொடர்பு:11:20 (07/03/2019)

இந்த 22 நகரங்களின் எதிர்காலம் என்னவாகும்? #AirPollution #VikatanInfographics

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 12 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் காற்று மாசுபாட்டால் இறந்துபோகின்றனர் என்றும், இங்கு காற்று மாசுபாடுதான் ஐந்தாவது பெரிய ஆட்கொல்லி எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த 22 நகரங்களின் எதிர்காலம் என்னவாகும்? #AirPollution #VikatanInfographics

ண்ண உணவில்லாமல்கூட ஒரு சில நாள்கள் உயிர்வாழலாம். ஆனால், சுவாசிக்கக் காற்றில்லை என்றால் என்னாகும்? நம் பூமியில் உள்ள வளிமண்டலத்தில் 78% நைட்ரஜனும், 21% பிராணவாயுவும், 1% கரியமிலவாயுவும் சில பிற வாயுக்களும் உள்ளன. வாயுக்களின் இந்த சமச்சீர் நிலை மாறாமல் இருக்கும் வரையில் வளிமண்டலம் எவ்வித பாதிப்பையும் அடையாது. உலகம் தொழில்மயமாதல், நவீனமயமாதல், காடுகளை அழித்தல் போன்ற காரணங்களால் வளிமண்டலத்தில் வாயுக்களின் சமச்சீர் நிலை குலைகிறது. இது காற்று மாசுபடுத்துவதற்கும் வழிவகை செய்கிறது. காற்று மாசுபாடு என்பது இந்தியா உட்பட பல உலக நாடுகளை  அச்சுறுத்தும் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. 

நாம் சுவாசிக்கும் காற்றை, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்ஸைடுகள், பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்தும் வாகனங்களிலிருந்தும் வெளிவரும் வீரியமிக்க ஹைட்ரோ கார்பன்கள், வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்ஸைடு, உலோகம் பிரித்தெடுக்கும் ஆலைகளிலிருந்தும் வெளிவரும் உலோகத்துகள்கள், ரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரிமச் சேர்மங்கள் முதலியவை மாசுபடுத்துகின்றன. உலகளவில் 46 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் காற்று மாசுபாட்டால் இறந்துபோகின்றனர், இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 12 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் காற்று மாசுபாட்டால் இறந்துபோகின்றனர் என்றும், இங்கு காற்று மாசுபாடுதான் ஐந்தாவது பெரிய ஆட்கொல்லி எனவும் தெரியவந்துள்ளது. 

உலகில் அதிக மாசடைந்த முதல் 30 நகரங்கள்

சமீபத்தில் ஏர் விஷூவல் (AirVisual) அமைப்பு, உலகில் அதிக மாசடைந்த நகரங்கள் மற்றும் நாடுகளின் 2018-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் உலகளவில் அதிக மாசடைந்த நகரமாகக் குர்கான் நகரம் உள்ளது. இந்த அறிக்கையின்படி அதிக மாசடைந்த முதல் 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில்தான் இடம்பெற்றுள்ளன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள எட்டு நகரங்களில் ஐந்து நகரங்கள் சீனாவிலும், இரண்டு நகரங்கள் பாகிஸ்தானிலும் மற்றும் ஒரு நகரம் வங்காள தேசத்திலும் உள்ளன. 

உலகில் அதிக மாசடைந்த முதல் 30 நகரங்கள் - காற்று மாசுபாடு

சீனாவின் பீஜிங் நகரம் மிகவும் மாசடைந்த நகரமாக இருந்துவந்த நிலையில். அந்த நாட்டு அரசாங்கம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பல்வேறு முயற்சிகளால் அந்த நகரத்தில் பெருமளவு மாசுக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்ற முன்னெடுப்பு அதிவிரைவில் இந்தியாவிலும் எடுக்கப்பட வேண்டும் என்பதே பல சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் வேண்டுகோள். இல்லையெனில் இந்த 22 நகரங்களில் வாழும் மக்களின் உடல்நலனும் அதிகளவில் பாதிக்கப்படும். அவர்களின் ஆரோக்கியமே கேள்விக்குறியாகும்.

காற்று மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் 

மனிதர்களுக்கு: சுவாசமண்டலத்தின் நோயான மார்புச் சளியை அதிகரித்தல், செயல்திறனின் அளவைக் குறைத்தல், தலைவலி மற்றும் தலைசுற்றல், இனப்பெருக்கத் தொகுதி மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் பாதிப்பு, நரம்பு நடத்தையில் பாதிப்பு, முதிர்ச்சியற்ற இறப்பு போன்றவை ஏற்படும். 

விலங்குகளுக்கு: ஏரிகள் மற்றும் ஓடைகளில் வாழும் மீன்கள் அமில மழையால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க வழியில்லாமல் இறக்கின்றன. ஓசோனின் கீழ்படலத்தில் சீர்குலைவு ஏற்படும்போது விலங்குகளின் நுரையீரல் திசுவானது பாதிக்கப்படுகிறது. 

தாவரங்களுக்கு: அமில மழையால் மரங்கள் அழிந்து, தாவரங்களின் இலைகள் அழிந்து, மண்ணை உரங்கள் அற்றதாக மற்றும் வளர்ச்சிக்கு உகந்தது அற்றதாக மாற்றுகிறது. ஓசோனின் கீழ்படலம் பாதிக்கப்படுவதால் தாவரங்களில் சுவாசம் தடைசெய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையைத் தாக்குவதால் அவற்றின் வளர்ச்சி பாதிப்படைகிறது.

உலகளவில் டெல்லி அதிகளவில் மாசடைந்ததுக்கு என்ன காரணம்?

உலகளவில் அதிகமான மாசடைந்த நகரமாக டெல்லியில் உள்ள பல நகரங்கள் இருப்பதற்கான முக்கிய காரணம் அங்குள்ள தொழிற்சாலைகளும் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகைகளும் இங்கு எரிக்கப்படும் அளவுக்கு அதிகமான குப்பைகளும்தான். அதோடு அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடையான நெற்பயிரின் மீதங்களைத் தீயிட்டுக் கொளுத்துகின்றனர். அவ்வாறு கொளுத்தப்படும்போது எழும் புகை காற்றின் போக்கில் தில்லிக்கு வந்து அந்நகரின் காற்று மாசுக்குக் காரணமாகிறது. 

சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு மையத்தின் (EPCA) அதிகாரபூர்வ அறிக்கையின்படி சுமார் 32 மில்லியன் டன் கழிவுகள் உருவாகின்றன. இந்தக் கழிவுகளை எரிப்பது தில்லியின் காற்று மாசில் சுமார் 30 விழுக்காடு காரணமாவதாகக் கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்கள் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், தேசிய சூழற்பொறியியல் ஆராய்ச்சி மையம் (NEERI) ஆய்வறிக்கையின்படி, டெல்லியின் காற்றில் கலந்துள்ள PM 2.5 துகள்களுக்கு 60 சதவிகிதம் முக்கிய காரணம் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலிருந்து வரும் புகைதான் என்று தெரிவிக்கிறது. 

உலகில் அதிகளவு மாசடைந்த முதல் மற்றும் கடைசி பத்து நாடுகளைக் கீழ் உள்ள படத்தில் காணலாம். 

உலகில் அதிக மாசடைந்த முதல் பத்து நாடுகள்

உலகில் அதிக மாசடைந்த கடைசி பத்து நாடுகள்

இப்படி அசுரவேகத்தில் அதிகரித்துவரும் இந்த மாசடைதலை இனியும் தாமதப்படுத்தாமல் குறைப்பதற்குத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் ஒருமித்தக் கருத்தாக உள்ளது 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close