பேருந்துக்கு அடியில் வீசப்பட்ட குண்டு! - அமைதியைக் குலைக்க நடந்த ஜம்மு பேருந்து நிலையத் தாக்குதல் | Grenade attack on Jammu bus stand

வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (07/03/2019)

கடைசி தொடர்பு:18:49 (07/03/2019)

பேருந்துக்கு அடியில் வீசப்பட்ட குண்டு! - அமைதியைக் குலைக்க நடந்த ஜம்மு பேருந்து நிலையத் தாக்குதல்

கடந்த மாதம் 14-ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணமடைந்தனர். அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக,  கடந்த 26-ம் தேதி காஷ்மீர் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள்மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. பிறகு, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார். கடந்த மாதத்திலிருந்து இதுபோன்ற  சம்பவங்களால் இந்திய எல்லைப் பகுதியிலும் காஷ்மீரிலும் தொடர் பதற்றம் நிலவிவருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நேரத்தில், அசம்பாவிதங்களைத் தடுக்க காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை மிகவும் பரபரப்பாக செயல்படும் ஜம்மு பேருந்து நிலையத்தில், சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இன்று பிற்பகல், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், ஜம்முவில் இருந்து டெல்லி செல்லும் பேருந்தில் குண்டு வெடித்தது. முன்னதாக இந்தத் தாக்குதலில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 - ஆக அதிகரித்துள்ளது. ஐந்து பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், முகமது ஷாரிக் என்ற 17 வயது இளைஞர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  அந்த இளைஞர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இளைஞர் இறந்த செய்தியை உத்தரகாண்ட் ஐஜி, தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல் துறையினர், “ ஜம்மு பேருந்தில் குண்டு வீசிய நபரை கைது செய்துள்ளோம். சிசிடிவி கேமிரா மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உதவியுடன் அவரை பிடிக்கமுடிந்தது. அவன் ஜீன்ஸ் பேட் அணிந்துக்கொண்டு சிவப்பு நிற பேக் மாட்டியிருந்தான். குற்றவாளி பேருந்துக்கு அடியில் குண்டை எரிந்ததால் பேருந்து வெடித்து சிதறியுள்ளது. கைது செய்யப்பட்ட அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். தாக்குதல் நடந்த இடத்தில் கிடைத்த அனைத்து ஆதரங்களையும் சேகரித்துள்ளோம், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என கூறியுள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறும்போது, “ பிற்பகல் அனைவரும் தங்களின் பணிகளில் பரபரப்பாக இருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், ஒரு பேருந்தில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. அதில், அருகில் இருந்த நான்கு பேருந்துகள் நொறுங்கின. இதில், பலர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். குண்டு வெடித்ததும், அடுத்து என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாமல் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தனர். மேலும் ஒரு குண்டு வெடித்துவிடுமோ என்ற பயம் அனைவர் மனதிலும் இருந்தது. பிறகு, எதுவும் நடக்கவில்லை என உறுதியான பிறகுதான், தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்க நாங்கள் செல்லவேண்டிய நிலை இருந்தது. பேருந்தின் பல இடங்களில் ரத்தம் சிதறியிருந்தது. ஜம்மு மக்களின் அமைதியைக் குலைக்கவே இதுபோன்ற செயல் நடந்துள்ளது'' எனத் தெரிவித்துள்ளார். 

கடந்த பத்து மாதங்களில், மூன்றாவது முறையாக ஜம்முவில் இதுபோன்ற வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close