``எனது வேலைகளினால் அறியப்படுகின்ற நபர் நான்” -அட்டர்னி ஜெனரலின் கருத்துக்கு வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் பதிலடி | Lawyer Indra gave immediate response to attorney general

வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (08/03/2019)

கடைசி தொடர்பு:13:19 (08/03/2019)

``எனது வேலைகளினால் அறியப்படுகின்ற நபர் நான்” -அட்டர்னி ஜெனரலின் கருத்துக்கு வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் பதிலடி

உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் பற்றி அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்த கருத்து நீதிமன்றத்திலே விவாதப் பொருளாக மாறியது.

உச்ச நீதிமன்றம்

சி.பி.ஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதைப் பற்றி ட்விட்டரில் அவதூறான கருத்துகளை தெரிவித்து உச்சநீதிமன்றத்தை அவமதிப்பு செய்துவிட்டதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது அட்டர்னி ஜெனரல் மற்றும் மத்திய அரசு தனித்தனி வழக்குகள் பதிவு செய்திருந்தன.

அந்த வழக்குகள்  நீதிபதி  விசாரணைக்கு வந்தது. இரண்டு தரப்பினரும் தங்களுடைய வாதங்களை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், பிரசாந்த் பூஷண் தரப்பில் ஒரு மனுதாரராக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தன்னையும் இணைத்துக்கொண்டார். இந்திரா ஜெய்சிங் கணவர் ஆனந்த குரோவர் அவரின் வழக்கறிஞராக ஆஜரானார்.

குரோவர்

குரோவர் தன்னுடைய வாதத்தைத் தொடங்கும் முன்புதான் இந்திரா ஜெய்சிங் தரப்பில் ஆஜராவதாகத் தெரிவித்தார். நீதிபதி அருண் மிஸ்ரா குரோவர் கூறியதைச் சரியாக உள்வாங்கிக் கொள்ளாத நிலையில் மீண்டும் ``எந்த ஜெய்சிங்கை குறிப்பிடுகிறீர்கள், வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அல்லவே?” என கேள்வியெழுப்ப அவரைத்தான் குறிப்பிடுவதாக குரோவர் தெரிவித்தார்.

வழக்கறிஞர்  இந்திரா ஜெய்சிங்

அப்போது அதே அறையில் எதிர் தரப்பில் அமர்ந்திருந்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வழக்கறிஞர் ஆனந்த் குரோவரிடம், ``உங்களுடைய மனைவி என்று குறிப்பிடுங்கள்” என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். சிறிதும் தாமதிக்காமல் அதே அறையில் அமர்ந்திருந்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ``நான் என்னுடைய வேலைகளினால் அறியப்படுகின்ற நபர். நாங்கள் இவருடைய மனைவி அல்லது கணவன் என்று அடையாளப்படுத்தப்படுவதற்காக இங்கு இல்லை. அதனால்தான் நாங்கள் எங்களுடைய குடும்பப் பெயரை மாற்ற வேண்டாம் என முடிவு செய்தோம். அட்டர்னி ஜெனரல் அவர்களே, என்னை ஒரு வழக்கறிஞராகப் பாருங்கள். எனக்காக யார் நீதிமன்றத்தில் வாதிட வேண்டும் என்னுடைய விருப்பம்” என கடிந்துகொண்டதோடு தன்னுடைய கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அட்டர்னி ஜெனரலிடம் தெரிவித்தார்.

கே.கே வேணுகோபால்

அட்டர்னி ஜெனரலின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு தக்க, துரிதமான பதிலடியாக அமைந்தது இந்திரா ஜெய்சிங்கின் எதிர்வினை. பின்னர் கடுமையாக நடந்துகொண்டதற்கு இந்திரா ஜெய்சிங் மன்னிப்பு கோரவே, அட்டர்னி ஜெனரலும் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார். 


[X] Close

[X] Close