அயோத்தி பிரச்னையை தீர்க்க 3 மத்தியஸ்தர்கள்!- எட்டு வாரத்தில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court refers Ayodhya matter to Mediation

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (08/03/2019)

கடைசி தொடர்பு:11:35 (08/03/2019)

அயோத்தி பிரச்னையை தீர்க்க 3 மத்தியஸ்தர்கள்!- எட்டு வாரத்தில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

அயோத்தி விவகாரத்தில் மூன்று மத்தியஸ்தர்களை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

அயோத்தி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பகுதியை இந்து, இஸ்லாமியர் எனப் பல்வேறு அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இது தொடர்பான வழக்கு பல வருடங்களாக நடந்து வருவதுடன் அவ்வப்போது பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பகுதிகளாகப் பிரித்து இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் நிர்மோஹி அகாராக்களுக்கு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தன. 

உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்தப் பிரச்னையை மத்தியஸ்தரை வைத்து தீர்க்கலாம் என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். இந்த யோசனைக்கு இஸ்லாம் அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க, ராம் லல்லா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் ஆட்சேபனை தெரிவித்தன. கடந்த காலங்களில் இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததே இந்த ஆட்சேபனைக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்தனர். 

ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர்

அதில், அயோத்தி பிரச்னையை தீர்ப்பதற்கு மூன்று மத்தியஸ்தர்கள் நியமிக்கப்படுவதாகவும் இந்த மத்தியஸ்தர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், சமரச பேச்சுவார்த்தையை ஒரு வாரத்தில் தொடங்கி எட்டு வாரத்தில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி எப்.எம்.கலிஃபுல்லா தலைமையிலான குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், சென்னையைச் சேர்ந்தவர் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை ஊடகங்களில் வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சமரசப் பேச்சுவார்த்தையை உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தில் வைத்து நடத்த வேண்டும் எனவும், பேச்சுவார்த்தை முடிந்த நான்கு வாரத்தில் இதுதொடர்பாக அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close