ரவுடித்தனத்தால் சம்பாதித்தது ரூ.600 கோடி... பட்டப்பகலில் தாதா உயிரை எடுத்த எதிரிகள்! | bengaluru's richest gangster murdered by enemies

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (08/03/2019)

கடைசி தொடர்பு:14:09 (08/03/2019)

ரவுடித்தனத்தால் சம்பாதித்தது ரூ.600 கோடி... பட்டப்பகலில் தாதா உயிரை எடுத்த எதிரிகள்!

பெங்களூரில் ரூ.600 கோடிக்கு அதிபதியான தாதா பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாதா லக்ஷ்மணா

பெங்களுரில் உள்ள தாதாக்களில் லக்ஷ்மணா என்பவர் வெகு பிரபலம். தன் சகோதரர் ராமா என்பவருடன் சேர்ந்துகொண்டு பெங்களூரு மாநகரையே லக்ஷ்மணா ஆட்டிப் படைத்தார். இவர்கள் மீது நில மோசடி, கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. பெங்களூரில் இவர்களுக்கு எதிராக வேறு தாதாக்கள் உருவானாலும் அவர்களைக் கொலை செய்யத் தயங்க மாட்டார்கள். கடந்த 2005- ம் ஆண்டு பெங்களூரில் மற்றொரு தாதாவான மாச்சா மஞ்சாவை லக்ஷ்மணா, ராமர் மற்றும் 40 பேர் சேர்ந்து வெட்டிக் கொன்றனர். மாச்சா மஞ்சா தன் திருமணத்துக்காக அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து வெட்டிக் கொன்ற சம்பவம் அப்போது பெங்களூரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெங்களூரு மாநகர போலீஸாலும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. லக்ஷ்மணாவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.600 கோடி. பெங்களூரு நகரத்தில் இவர்தான் பணக்கார தாதா.

கடந்த ஜனவரி மாதத்தில் லக்ஷ்மணா வீட்டிலிருந்து ஏராளமான கறுப்புப் பணத்தை போலீஸார் கைப்பற்றினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பிப்ரவரி 22-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று தன் இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தபோது, மகாலக்ஷ்மி லேஅவுட் பகுதியில் உள்ள இஸ்கான் கோயில் அருகே 5 பேர்  கொண்ட கும்பல் இவரின் காரை வழிமறித்துள்ளது. லக்ஷ்மணா அவர்களிடத்தில் இருந்து தப்பி காரை வேகமாக ஓட்டினார்.

எனினும் விடாத அந்தக் கும்பல் மைசூர் சான்டல் சோப் நிறுவனத்தின் அருகே லக்ஷ்மணாவின் காரை மறித்தது. உள்ளே இருந்த லக்ஷ்மணா மீது மிளகாய்ப் பொடி வீசி வெளியே இழுத்தனர். பட்டப்பகலில் ஏராளமாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த கும்பல் லக்ஷ்மணாவை வெட்டிக் கொன்றது. சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த போலீஸார் லக்ஷ்மணாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், லக்ஷ்மணா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

தும்குர் அருகே ஹூலியூர்துர்கா பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மணா தன் வசிப்பிடத்தை மாண்ட்யா மாவட்டத்தில் உள்ள மட்டூர் பகுதிக்கு மாற்றினார். 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். தற்போது, கர்நாடக முதல்வர்  குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியில் ஐக்கியமானார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close