`ஜம்மு-வில் தாக்குதல் இருக்கும்ப்பா; வறுமையால் உன்ன அனுப்புறேன்!'- தாய் சொல்லைத் தட்டாத வாலிபர் பலியான சோகம் | Shariq killed in Jammu bus stand blast

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (08/03/2019)

கடைசி தொடர்பு:12:20 (08/03/2019)

`ஜம்மு-வில் தாக்குதல் இருக்கும்ப்பா; வறுமையால் உன்ன அனுப்புறேன்!'- தாய் சொல்லைத் தட்டாத வாலிபர் பலியான சோகம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தாக்குதல் நடந்து 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இறந்த சோகம் இன்னும் மறையாத நிலையில் நேற்று பிற்பகல் மீண்டும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது.

ஜம்மு குண்டு வெடிப்பு

மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஜம்மு பேருந்து நிலையத்தில் நேற்று பிற்பகல் டெல்லி செல்வதற்காக நின்றுகொண்டிருந்த பேருந்து மீது, ஒரு நபர் கையெறி குண்டை வீசியுள்ளார். இந்தத் தாக்குதலில் 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இன்று பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ஹரித்வாரைச் சேர்ந்த 17 வயது இளைஞர் இறந்துவிட்டதாக அம்மாநில டி.ஜி.பி தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இன்று மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள டோடா கல்யன்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயதான ஷாரிக். இவர்தான் நேற்றைய கையெறி குண்டு தாக்குதலில் இறந்தவர். இவரின் தந்தை இரண்டு வருடங்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்துவிட்டார். அதன் பிறகு ஷாரிக் படிப்பை நிறுத்திவிட்டு தன் குடும்பத்துக்காக பணிக்கு செல்லத் தொடங்கியுள்ளார். அவருக்கு ஐந்து சகோதரிகளும் ஒரு சகோதரரும் உள்ளனர். குடும்ப நிலை காரணமாக ஜம்முவில் உள்ள தன் மாமா வீட்டில் தங்கி தையல் வேலை கற்றுக்கொண்டு அதை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்ற எண்ணத்தில் நேற்று ஜம்மு வந்துள்ளார். அந்த நிலையில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர் இறந்த செய்தியைக் கேட்டதும் மொத்த குடும்பமும், டோடா கிராம மக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

ஷாரிக்

photo Credits : Hindustan times

இதுபற்றி பேசிய டோடா கிராமத் தலைவர் வாஜித் முகமது, ‘ ஷாரிக்கின் குடும்பத்தினர் தையல் மற்றும் விவசாயத்தைப் பிரதான தொழிலாக செய்து வந்துள்ளனர். தந்தை இறந்ததால் தன் ஐந்து சகோதரிகளை கரை சேர்க்க வேலை செய்ய நினைத்தவருக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஷாரிக் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன், அனைவரிடமும் பண்பாக நடந்துகொள்வான். அதிக கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஜம்மு-காஷ்மீரில் அதிகமாகத் தாக்குதல் நடக்கும் எனத் தெரிந்தும் குடும்ப நிலை காரணமாக ஷாரிக்கை ஜம்மு அனுப்ப சம்மதித்தார் அவரின் தாய். ஷாரிக்கின் இறப்பு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.


[X] Close

[X] Close