தமிழக அரசியல்வாதிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் எப்படி இருக்கிறது? #VikatanInfographics | Representation of Women in Tamilnadu politics

வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (09/03/2019)

கடைசி தொடர்பு:12:30 (16/03/2019)

தமிழக அரசியல்வாதிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் எப்படி இருக்கிறது? #VikatanInfographics

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுகள் அனைத்து கட்சிகளிலும் தொடங்கிவிட்டன. இந்த முறையாவது பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்.

தமிழக அரசியல்வாதிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் எப்படி இருக்கிறது? #VikatanInfographics

லகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளுள் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 940 பெண்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தாலும், ஜனநாயகத்தின் அதிகாரம் சுதந்திரத்திற்குப் பின்பும், பெண்களைச் சென்றடையவில்லை. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம்  மூன்றில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை பி.ஜே.பி, காங்கிரஸ் என எந்தக் கட்சியாலும் நிறைவேற்ற முடியாத ஒன்றாகவே நீடித்து வருகிறது. 

கடந்த 2014-ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி தனது 428 வேட்பாளர்களில் 38 பெண்களை மட்டுமே நிறுத்தியது; காங்கிரஸ் 60 பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியது.

234 தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில், கடந்த 20 ஆண்டுகளாக, சட்டமன்றத்தில் 10 சதவிகிதம் பெண்கள் மட்டுமே ஆட்சியாளர்களாக அமர்ந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக, பெரும்பாலான ஆட்சிக்காலம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைவசம் இருந்தும், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவாகவே இருந்துள்ளது. எனினும், மற்ற கட்சிகளைவிட, சட்டமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அ.இ.அ.தி.மு.க அதிகமான பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 

பெண்களின் பிரதிநிதித்துவம்

பெண்களை நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் அனுப்புவது பிரதிநிதித்துவத்துக்கான கோரிக்கை என்றாலும், பெண் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள தொகுதிகள் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப் பொருளாதார ஆய்வுக்கான உலக நிறுவனம் (UNU-WIDER) மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. 

1992 முதல் 2012 வரை 4,295 சட்டமன்றத் தொகுதிகளில் வளர்ச்சியை முன்வைத்துச் செய்யப்பட்ட ஆய்வில், பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் ஆண் உறுப்பினர்களின் தொகுதிகளைவிட ஆண்டுக்கு 1.8 சதவிகிதம் அதிக வளர்ச்சியைப் பெற்றுள்ளன. பெண் உறுப்பினர்களின் தொகுதிகளில் சாலை வசதிகள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளன; ஊழல் குறைவாக நிகழ்ந்துள்ளது. பெண்களுக்கான நலத்திட்டங்களும் ஆண் உறுப்பினர்களின் தொகுதிகளைவிடச் சிறப்பாக அமல்படுத்தப்பட்டுள்ளன.  

கல்வி, சொத்து முதலானவற்றில் பெண் உறுப்பினர்களும், ஆண் உறுப்பினர்களும் சமமாக இருந்தாலும், பெண் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் குற்றப் பின்னணியற்றவர்களாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 32 சதவிகிதம் ஆண் உறுப்பினர்கள் குற்றப் பின்னணியுள்ளவர்களாக இருந்தனர் என்றும், 10 சதவிகிதம் பெண் உறுப்பினர்கள் குற்றப் பின்னணியுடன் இருந்ததாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

நாடாளுமன்றத்தில் பெண்கள்

'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்' என்று தற்போது அறிவித்துள்ளார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் 9 பெண்கள் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர். இது, இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் அதிகமான எண்ணிக்கை. இவை, இந்திய அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை நோக்கிய ஆரோக்கியமான வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வரலாற்றுப் பின்னணியில் கோமாதாமுதல் பாரதமாதாவரை பெண்கள் தொடர்ந்து புனிதப்படுத்தப்பட்டு வந்தாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை; ஆட்சி மன்றங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கவில்லை. வன்புணர்வு மசோதா, முத்தலாக், பெண் குழந்தைக்கான கல்வி என ஆண் ஆட்சியாளர்களே பெண்களின் உரிமைகளைப் பேசாமல், பெண்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். தேசியக் கட்சிகளிலும், மாநிலக் கட்சிகளிலும் பெண்கள் பொதுப் பதவிகளுக்கு வருவதோடு, அதிகளவில் வேட்பாளர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுகள் அனைத்துக் கட்சிகளிலும் தொடங்கிவிட்டன. இந்த முறையாவது பெண்கள் அதிகளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். அதுவே ஜனநாயகத்தைக் காக்கும். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close