`மாமா வீட்டுக்குச் சென்றவன் திரும்பவேயில்லை' - ஜம்முவில் குண்டு வைத்த12 வயது சிறுவனின் பின்னணி | Jammu grenade attack accused is a student of Class 9

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (09/03/2019)

கடைசி தொடர்பு:13:35 (09/03/2019)

`மாமா வீட்டுக்குச் சென்றவன் திரும்பவேயில்லை' - ஜம்முவில் குண்டு வைத்த12 வயது சிறுவனின் பின்னணி

மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஜம்மு பேருந்து நிலையத்தில், கடந்த 7-ம் தேதி பிற்பகல் 11:30 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், ஜம்மு-வில் இருந்து டெல்லி செல்லும் பேருந்தில், குண்டு வெடித்தது. இந்தத் தாக்குதலில், இரண்டு பேர் மரணமடைந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 

ஜம்மு

அன்றைய தினம் பிற்பகல், அடையாளம் தெரியாத ஒருவர் கையெறி குண்டைப் பேருந்துக்கு அடியில் வீசிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. பிறகு, சிசிடிவி கேமிரா மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உதவியுடன் நாக் ரோடா சுங்கச்சாவடியில் வைத்து அவரை காவலர்கள் கைதுசெய்தனர். 

தற்போது, குற்றவாளி பற்றிய சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன்தான் இந்தச் செயலில் ஈடுபட்டது எனத் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட பிறகு, அவனது பள்ளியில் இருந்த பிறந்தநாள் சான்றிதழ் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், 10-03-2006 என அவனின் பிறந்தநாள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி நாளை அவனுக்கு 13 வயது ஆகவுள்ளது. அவன், 9-ம் வகுப்பு படித்துவருகிறான். தன் குடும்பத்தில் மூத்த மகன், அவனது தந்தை பெயின்ட்டராக வேலைசெய்துவருகிறார்.

நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஜம்மு-வின் மூத்த காவல்துறை அதிகாரி எம்.கே. சின்ஹா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாகப் பேசியுள்ள ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் விஜய குமார், ‘ ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வீசியவர் ஒரு சாதாரண இளைஞன். கூலிப்படையினால் மூளைச்சலவை செய்யப்பட்டு, அவர் இவ்வாறு செய்திருக்கலாம். அவர் பின்னால் உள்ள அமைப்பைக் கண்டறிய வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

குற்றவாளியின் தாய் கூறும்போது, ‘கடந்த செவ்வாய்க் கிழமை பிற்பகல், தனது தாய் மாமன் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டான். அன்றைய தினம் இரவு, உறவினர் வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் புதன்கிழமை இங்கு ( தன் வீட்டுக்கு) வருவதாக மாமாவிடம் கூறிவிட்டு புறப்பட்டுள்ளான். ஆனால், இங்கு வரவே இல்லை. அவன், ஜம்மு சென்றுள்ளான் என எங்களுக்குத் தெரியாது. பிறகு, வியாழக்கிழமை காலை எனக்கு போன் செய்து, ஜம்முவில் உள்ள உறவினர் போன் நம்பரைக் கேட்டுத் தெரிந்துகொண்டான். அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகுதான் அவன் கைதாகியுள்ளான் என்பது எங்களுக்குத் தெரியும்’  என்றார். ‘ ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உண்மையைக் கண்டறிய வேண்டும். அவன் மிகவும் அப்பாவி. இது போன்ற செயல்களை நிச்சயம் செய்திருக்க மாட்டான். அவனது பின்புலங்களைச் சோதனைசெய்ய வேண்டும்’ எனக் குற்றவாளியின் மற்றொரு உறவினர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், குற்றவாளி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பிடமிருந்து 50,000 ரூபாய் பெற்றுக்கொண்டு, அவர்களால் மூளைச் சலவை செய்யப்பட்டு, அந்த அமைப்பின் அடிமட்டத்தில் வேலைசெய்துள்ளான் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. 
 


[X] Close

[X] Close