எல்லை தாண்டி 3 முறை தாக்கியிருக்கிறோம்; 3-வது தாக்குதல் குறித்துக் கூற முடியாது! - ராஜ்நாத் சிங் | Indian troops conduct 3 air strikes in last 5 years, says Minister Ranjath singh

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (09/03/2019)

கடைசி தொடர்பு:19:30 (09/03/2019)

எல்லை தாண்டி 3 முறை தாக்கியிருக்கிறோம்; 3-வது தாக்குதல் குறித்துக் கூற முடியாது! - ராஜ்நாத் சிங்

இந்தியப் படைகள், கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தியிருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார். 

அமைச்சர் ராஜ்நாத் சிங்

`உரி’ தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்தியப் படைகள் கடந்த 2016ல் தாக்குதல் நடத்தின. இந்தியப் பாதுகாப்புப் படைகள் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில், தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்தியா தரப்பில் சொல்லப்பட்டது. அதேபோல, புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் செயல்பட்டுவந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதத் தளத்தின்மீது இந்திய விமானப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல் சம்பவத்தில், தீவிரவாதிகள் இறந்தது குறித்து மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேநேரம், தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறித்து பா.ஜ.க தலைவர்கள் பேசிவருகிறார்கள். இதுகுறித்துப் பேசிய பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித் ஷா, பால்கோட் தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.  

விமானப்படை தாக்குதல்

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியப் படைகள் எல்லை தாண்டி 3 முறை தாக்குதல் நடத்தியிருப்பதாகப் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், `கடந்த 5 ஆண்டுகளில் இந்தியப் படைகள் 3 முறை எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தியிருக்கிறது. நமது படைகள் வெற்றிகரமாக வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கின்றன. அவற்றில் 2 தாக்குதல்கள்குறித்த தகவல்களை நான் உங்களுக்குத் தருகிறேன். ஆனால், மூன்றாவது தாக்குதல் குறித்து எதுவும் பேச முடியாது’’ என்று பேசியிருக்கிறார். 


[X] Close

[X] Close