சர்ஃப்எக்ஸெல்: இந்து - முஸ்லிம் நல்லிணக்க விளம்பரத்துக்கு எதிர்ப்பு!  | Surf Excel advertisement promoting Hindu-Muslim harmony theme faces flak

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (11/03/2019)

கடைசி தொடர்பு:14:25 (11/03/2019)

சர்ஃப்எக்ஸெல்: இந்து - முஸ்லிம் நல்லிணக்க விளம்பரத்துக்கு எதிர்ப்பு! 

ந்து - முஸ்லிம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சர்ஃப் எக்ஸெல் சோப்பு விளம்பரத்துக்கு, எதிர்பாராத கோணத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் அதைப் புறக்கணிக்கும் வாசகம் ட்ரெண்டானது. 

சர்ஃப் எக்ஸெல்

சோப்பு, பற்பசை உள்ளிட்ட நுகர்வோர் பொருள் தயாரிப்பில் பிரபலமாக விளங்கும் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் தயாரிக்கும் பல்வேறு பிராண்ட் சோப்புகளில், சர்ஃப் எக்ஸெல் சோப்பும் ஒன்று. கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, இந்த சோப்பை மேலும் பிரபலபடுத்தும் நோக்கத்தில், இந்த நிறுவனம் விளம்பரப் படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. 

அதில், வரவிருக்கும் ஹோலி பண்டிகையை மனதில் வைத்து, 'வண்ணங்கள் நம்மை ஒன்றிணைக்கிறது' ( ரங் லாயே சங்) என்ற கோஷத்துடன் தயாரிக்கப்பட்டிருந்த இந்த விளம்பரப் படத்தில் இரண்டு இளம் சிறார்கள் நடித்திருந்தனர். இந்து சிறுமி ஒருத்தி, சைக்கிளில் தான் குடியிருக்கும் குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி வந்தபடியே, தன்மீது சாயத் தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்களை அடிக்குமாறு கூறுகிறாள். அங்கிருக்கும் சிறுவர்களும் அவள்மீது கலர் தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்களை அடிக்கிறார்கள். இதில், அவளது ஆடை முழுவதும் கலர் அப்பிக்கொள்கிறது. அதேசமயம், சிறுவர்களிடம் மேற்கொண்டு அடிப்பதற்கு பலூன்கள் இல்லாமல் காலியானவுடன், தனது நண்பனான இஸ்லாமிய சிறுவனை வெளியில் வருமாறு சைகை செய்கிறாள். தூய வெண்மையான ஆடை மற்றும் தலையில் குல்லா அணிந்து வரும் அந்தச் சிறுவனை, அந்தச் சிறுமி தனது சைக்கிளில் ஏற்றிச்சென்று, அருகில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகைக்காக இறக்கிவிட்டுச் செல்கிறாள். அப்போது, "கறை நல்லது" என்ற வாசகத்துடன் அந்த விளம்பரம் முடிவடைகிறது. 

இந்து - முஸ்லிம் மக்களிடையே மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்தும் இந்த விளம்பரத்துக்கு பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளபோதிலும், இன்னொரு தரப்பினரிடமிருந்து எதிர்பாரா கோணத்தில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 

இது தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், சர்ஃப் எக்ஸெல் சோப்பைப் புறக்கணிக்குமாறு கூறி #BoycottSurfExcel என்ற வாசகம் ட்ரெண்டானது. இந்த விளம்பரத்தை எதிர்ப்பவர்கள், 'லவ் ஜிகாத்'தை ஊக்குவிக்குமாறு இது இருப்பதாகவும், ஹோலியைவிட நமாஸ் (தொழுகை) முக்கியமானது என்பது போன்ற கருத்தை வெளிப்படுத்துவதுபோன்று இருப்பதாகவும், எனவே இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் இதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறுகின்றனர். 

ட்விட்டரில் பாராட்டு

மேலும் சிலர், முஹராம் அன்று இஸ்லாமிய சிறுவன் ஒருவன், கோயிலுக்குச் செல்லும் இந்து சிறுமியைப் பாதுகாப்பாகக் கொண்டு சென்று விடுவது போன்று சர்ஃப் எக்ஸெல் விளம்பரப் படம் எடுக்க முடியுமா என்று கேட்டுள்ளனர். 

வேறு சிலரோ, இந்த விளம்பரம் இஸ்லாமிய சிறுமிகளை அவமதிப்பதுபோன்று இருப்பதாகவும், இஸ்லாமிய சிறுவன் தொழுகைக்குச் செல்ல இந்து சிறுமியின் உதவி தேவைப்படுவதுபோன்று இந்த விளம்பரப் படம் சித்திரிப்பதாகவும், இது அனைத்து இஸ்லாமிய சிறுவர் சிறுமிகளையும் இழிவுபடுத்துவது போன்று இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

எதிர்ப்பு

இப்படி இரண்டு தரப்பிலிருந்தும் கிளம்பியுள்ள எதிர்ப்புகளைப் பார்த்து, இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் கிறுகிறுத்துப் போய் உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close