பணமதிப்பிழப்பு: மோடியின் கருத்தை ஏற்க மறுத்த ரிசர்வ் வங்கி இயக்குநர்கள்!  | Demonetisation to kill black money: RBI directors didn't agree 

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (11/03/2019)

கடைசி தொடர்பு:15:35 (11/03/2019)

பணமதிப்பிழப்பு: மோடியின் கருத்தை ஏற்க மறுத்த ரிசர்வ் வங்கி இயக்குநர்கள்! 

`பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்கும்' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை ஏற்க மறுத்து, அதற்கு ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் எதிர்ப்பு தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

பணமதிப்பிழப்பு

கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று இரவு 8 மணி அளவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இனிமேல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியதோடு, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர்கள் குழுவுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார். அப்போது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க இருப்பதாக பிரதமர் தெரிவித்த கருத்தை ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர்கள் சிலர் ஏற்க மறுத்து, அதற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். 

இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் `மினிட்ஸ்' எனப்படும் நிகழ்ச்சி நிரல்கள் குறித்த பதிவில் இடம்பெற்றுள்ளது. அதன் மூலம் இந்தத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்

500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாகவும், எனவே அவற்றைச் செல்லாது என அறிவிப்பதன் மூலம் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதை ஏற்க மறுத்த ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் சிலர், கறுப்புப் பணத்தை வைத்துள்ளவர்கள் பெரும்பாலும் அதை ரொக்கமாக வைத்திருக்கவில்லை என்றும், அது ரியல் எஸ்டேட், தங்கம் எனச் சொத்துகளாக வைத்துள்ளதாகவும் கூறினர். எனவே, 500 மற்றும் 1000 ரூபாயைச் செல்லாது என்ற அறிவிப்பு இந்தச் சொத்துகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளனர். 

மேலும், பொருளாதாரம் விரிவடையும் வேகத்தைக் காட்டிலும் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகமாக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டபோது, அது பணவீக்கத்தில் சரி செய்யப்பட்டுவிடும் என்றும், சிறிதளவு இருக்கும் வித்தியாசம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தி விடாது என்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கறுப்புப் பணம் என்பது கவலை அளிக்கக்கூடிய விஷயம்தான் என்றாலும், 400 கோடி ரூபாய் அளவுக்கே அது உள்ளது என்றும், புழக்கத்துக்கு விடப்பட்டுள்ள மொத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது மிகச் சிறிய எண்ணிக்கைதான் என்றும் ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் உயர் மதிப்பு ரூபாய் நோட்டு தடையால் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கு இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற அரசு தரப்பின் வாதத்தைப் பொது நலன் கருதி ஏற்று, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்த ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் கடைசியில் கூறியதாக `மினிட்ஸ்' தகவல் மூலம் தெரியவந்துள்ளது. 

மோடி - ரிசர்வ் வங்கி

இந்த நிலையில், கறுப்புப் பணம் சொத்துகளாக மாற்றப்பட்டுவிட்டது என்று ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் சொன்னதை நிரூபிக்கும் விதமாக, பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 99.3 சதவிகித 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக 2 ஆண்டுகளுக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close