காங்கிரஸில் இணைய உள்ளார் ஹர்த்திக் படேல்! | harthick patel going to join in congress

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:13 (16/03/2019)

காங்கிரஸில் இணைய உள்ளார் ஹர்த்திக் படேல்!

குஜராத்தில் உயர் வகுப்பைச் சார்ந்த படேல் சமூகத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கடந்த சில ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர் ஹர்த்திக் படேல். கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஹர்த்திக் படேல் முன்னெடுத்த போராட்டங்களும், பிரசாரங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.  கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வயதைப் பூர்த்தி அடையாததால் அவரால் போட்டியிட முடியாமல் போனது.

ஹர்த்திக் படேல்

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் கூட்டணிகள் இறுதி செய்யும் நிலையை எட்டியுள்ளன. இந்த நிலையில், ஹர்த்திக் படேல் காங்கிரஸில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள  ஹர்த்திக் படேல், `` சமூகத்துக்கும் நாட்டுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு வடிவம் கொடுக்கும் விதமாக மார்ச் 12-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முக்கிய தலைவர்களின் முன்னிலையில் காங்கிரஸில் இணைய உள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே குஜராத்தைச் சார்ந்த 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஹர்த்திக் படேல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


[X] Close

[X] Close