அனில் அம்பானி விவகாரம்: எஸ்.பி.ஐ வங்கியை விளாசிய தீர்ப்பாயம்! | NCLAT slams SBI-led lenders of RCom for misleading tribunal

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (12/03/2019)

கடைசி தொடர்பு:18:45 (12/03/2019)

அனில் அம்பானி விவகாரம்: எஸ்.பி.ஐ வங்கியை விளாசிய தீர்ப்பாயம்!

னில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை ஏலம் விடுவது தொடர்பாக தவறான தகவல் தந்ததாக எஸ்.பி.ஐ வங்கியைக் கடுமையாக கண்டித்துள்ள தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம்,  இதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேள்வியும் எழுப்பி உள்ளது. 

எஸ்பிஐ வங்கி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நஷ்டமடைந்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனம் 46,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இந்த நிறுவனத்துக்கு 40 வங்கிகள், நிறுவனங்களிடத்தில் கடன் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு முதல் சொத்துகளை விற்று கடனை அடைக்க ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், சொத்துகளை விற்க முடியவில்லை.  இதையடுத்து, இந்த நிறுவனம் தன்னை திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தை அணுகியது. 

இதனிடையே, ஸ்வீடன் நாட்டின் எரிக்சன் நிறுவனத்திடம் பெற்ற கடன் தொகையை திரும்பிச் செலுத்தாததால், அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிலுவைத் தொகையான 453 கோடியை 4 வாரத்துக்குள் செலுத்தாவிட்டால் அனில் அம்பானி 3 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என அண்மையில் உத்தரவிட்டிருந்தது. 

அனில் அம்பானி

இதையடுத்து, பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார் அனில் அம்பானி. ரூ.118 கோடி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது. இது தவிர, வருமான வரித் துறையிடமிருந்து ரீஃபண்ட் தொகை ரூ.260 கோடி,  வந்திருக்கிறது. ஆனால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸுக்குக் கடன் தந்த நிறுவனங்கள் புகார் செய்ததன் விளைவாக, அந்த ரீஃபண்ட் தொகையை விடுவிக்க வங்கிகள்  கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கும் எஸ்.பி.ஐ வங்கி மறுத்துவிட்டது. 

இந்த நிலையில், இது தொடர்பாக அனில் அம்பானி தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி எஸ்.ஜே. முகபோத்யாயா தலைமையிலான தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ஸ்பெக்டரம், டவர், பைர் மற்றும் இதர தொழில்நுட்ப  உபகரணங்கள் உள்ளிட்ட சொத்துகளை விற்பதன் மூலம் அந்த நிறுவனம் கொடுக்க வேண்டிய கடன் தொகையில் 37,000 கோடி ரூபாய் வரை வசூலிக்க பொன்னான வாய்ப்பு என்று வங்கிகள் கூட்டமைப்பு (Joint Lender's Forum - JLF) தவறான தகவலை அளித்து, தீர்ப்பாயத்தைத் தவறாக வழிநடத்திவிட்டதாகவும்,  குற்றம் சாட்டியது. 

தீர்ப்பாயம்

``நீங்கள் (வங்கிகள்  கூட்டமைப்பு) சொன்னபடி சொத்துகள் விற்பனை நடைபெறவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏன் செயல்படுத்த விடாமல் செய்கிறீர்கள்? யாரோ ஒருவரை (அனில் அம்பானி) சிறைக்கு அனுப்புவதால் எங்கள் முன்னர் உள்ள பிரச்னை தீர்ந்து விடாது" என்று கூறிய தீர்ப்பாயம், தீர்ப்பாயத்தைத் தவறாக வழிநடத்தியதற்காக எஸ்.பி.ஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள வங்கிகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close