``அன்று டி.என்.ஏ சோதனைக்கு ராகுலை அனுப்பாதது ஏன்?” - மத்திய அமைச்சர் மீண்டும் சர்ச்சைப் பேச்சு | Ananth Kumar Hegde kicked off a controversy questioning on Rahul Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:22 (16/03/2019)

``அன்று டி.என்.ஏ சோதனைக்கு ராகுலை அனுப்பாதது ஏன்?” - மத்திய அமைச்சர் மீண்டும் சர்ச்சைப் பேச்சு

இந்தியா முழுவதும், வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை அனைவரும் பிரசாரத்துக்காகப் பறந்துகொண்டிருக்கின்றனர்.

 மத்திய அமைச்சர் அனந்தகுமார்

மாநில திறன் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே  இருக்கும் இடத்தில், நிச்சயம் சர்ச்சை இருக்கும் என்ற அளவுக்கு அவர் சர்ச்சை கருத்துகளுக்குப் பெயர்பெற்றவர். முன்னதாக  இந்துப்  பெண்களைத் தொடுபவர்களின் கைகளை வெட்ட வேண்டும் என மதரீதியிலான கருத்து தெரிவித்தார். பிறகு, ராகுல் காந்தியின் தந்தை ஒரு முஸ்லிம், தாய் கிறிஸ்துவர், அப்படி இருக்க ராகுல் மட்டும் எப்படி இந்து மதத்தைச் சார்ந்திருக்க முடியும் எனப் பேசி, காங்கிரஸாரின் கடும் கோபத்துக்கு ஆளானார்.

இந்நிலையில் தற்போது, புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கர்நாடக மாநிலம் சிர்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனந்தகுமார் ஹெக்டே, “முஸ்லிமாகப் பிறந்த ஒருவர்தான் (ராகுல் காந்தி) தன்னை நியாயப்படுத்த, நான் உண்மையான இந்து என்று அடிக்கடி கூறிக்கொள்வர். ராகுல்காந்தி  இந்து என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? ஒரு முஸ்லிம் தந்தைக்கும் கிறிஸ்துவ தாய்க்கும் பிறந்தவர் எப்படி காந்தியாக  இருக்க முடியும். இது எப்படி சாத்தியம். 

ராகுல்

நான் நகைச்சுவைக்காகப் பேசவில்லை. ராஜீவ் காந்தி இறந்தபோது, அவரின் உடல் பாகங்களைக் கண்டுபிடிக்க டி.என்.ஏ சோதனை தேவைப்பட்டது. அதற்காக, பிரியங்காவைத்தான் சோனியா அனுப்பினார். ராகுல் காந்தியை அல்ல. ராஜீவ் காந்தி மரணம் தொடர்பான ரெக்கார்டில் இது உள்ளது. ஹைப்ரிட் மனிதரான ராகுல்காந்தி, பால்கோட்டில் இந்தியா நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார். இதுபோன்றதுதான், அந்தக் கட்சியின் குணம். அந்தக் கட்சியைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்ய எந்த இந்தியனும் அனுமதிக்க மாட்டார்.

ராகுல் காந்திக்கு, இந்த நாட்டைப் பற்றியும் இங்குள்ள சமயங்களைப் பற்றியும் சுத்தமாக எதுவும் தெரியாது. இப்படியிருக்க, அவர்கள் எவ்வாறு பொய் சொல்கிறார்கள் என்பதைப் பாருங்கள். இந்த விஷயத்தை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அறிவில்லாதவர்கள் இதை நிச்சயம் புரிந்துகொள்ள மாட்டார்கள். உலகில் உள்ள எந்த ஆய்வகத்திலும் இதுபோன்ற ஹைப்ரிட் மாதிரியை நீங்கள் பார்க்க முடியாது. தந்தையும் மகனும் வேறு வேறாக உள்ள மாதிரியை காங்கிரஸ் ஆய்வகத்தில் மட்டுமே காண முடியும்’ எனப் பேசியுள்ளார். 

இவரின் பேச்சு தேசிய அரசியலில் பூதாகரமாகியுள்ளது. அனந்தகுமாரின் கருத்துக்கு காங்கிரஸார் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


[X] Close

[X] Close