``இரண்டு மடங்கான தற்கொலைகள்... வராமல்போன காப்பீட்டுத் தொகை!” - இதுதான் இந்திய விவசாயிகள் நிலை | Number of farmer suicides in Maharashtra had doubled up

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (14/03/2019)

கடைசி தொடர்பு:13:03 (14/03/2019)

``இரண்டு மடங்கான தற்கொலைகள்... வராமல்போன காப்பீட்டுத் தொகை!” - இதுதான் இந்திய விவசாயிகள் நிலை

``இரண்டு மடங்கான தற்கொலைகள்... வராமல்போன காப்பீட்டுத் தொகை!” - இதுதான் இந்திய விவசாயிகள் நிலை

காராஷ்ட்ராவில் கடந்த நான்கு ஆண்டுகளில், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பொது நல ஆர்வலர் ஜிதேந்திர கட்ஜ் (Jeetendra Ghadge), தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்து சில தகவல்களைக் கேட்டிருந்தார். அதில் 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 11,995 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். இதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு முதல் 2014 -ம் ஆண்டு வரை 6,268 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர். இந்த இறப்பின் எண்ணிக்கையானது இப்போது இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விவசாயி

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விவசாயிகளுக்காக காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் சொல்லப்பட்டுள்ள முதல் வாக்கியமே விவசாயிகள் தற்கொலை செய்தால் இழப்பீடு வழங்க முடியாது என்பதுதான். இது ஒரு சிறிய துளிதான். இதைப்போல பல முக்கியமான விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி விவசாயிகள் தங்களுக்கு செய்துகொள்ளும் காப்பீட்டுத் திட்டத்தால் எந்தவிதமான பலனும் அவர்களுக்கோ அல்லது அவரது குடும்பங்களுக்கோ கிடைப்பது இல்லை.
இதற்கு முன்னர் பல லட்சம் குடும்பங்களுக்கு தலா 1,00,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகைகூட மறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 2014-ல், 1,358 விவசாயக் குடும்பங்கள் இழப்பீடு பெற்றனர். ஆனால், 674 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் 2018-ம் ஆண்டைப் பார்க்கும்போது நிராகரிப்பு எண்ணிக்கை 1,050 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல இழப்பீட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வழக்குகளும் 1,330 ஆகக் குறைந்திருக்கின்றன.

மகாராஷ்ட்ராவில் உள்ள மாவட்டங்களில் அமராவதி மாவட்டம் அதிக அளவிலான எண்ணிக்கையிலான தற்கொலைகளைப் பதிவு செய்திருக்கிறது. அதிலும், மிக மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டதும் அமராவதிதான். அமராவதி இப்போது விதர்பாவின் ஒரு பகுதியாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் இப்பகுதியில்தான் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் விண்ணப்பித்த இழப்பீட்டுக்கும் நிராகரிப்புதான் பதிலாகக் கிடைத்திருக்கிறது.  

2016 மற்றும் 2018 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும், இழப்பீடுகளின் பெரும்பகுதி நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிப்புகளின் எண்ணிக்கையானது இதுவரை இழப்பீடு வழங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கிறது. 2015-ம் ஆண்டில் 465 வழக்குகளுக்கு இழப்பீடாகக் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், அதே ஆண்டில் 541 வழக்குகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல 2018-ம் ஆண்டு காலகட்டத்தில் 398 விவசாயக் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், 454 வழக்குகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல விவசாயிகளின் இறப்பையும்கூட தற்கொலை என்றே பல வழக்குகளுக்குப் பதிவு செய்திருக்கிறது, மகாராஷ்ட்ர காவல்துறை. இதுவும் ஒருவகையில் இழப்பீட்டுத் தொகை பெற முட்டுக்கட்டையாகவே விவசாயிகளுக்கு இருந்தது வருகிறது.

விவசாயி

`விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகையானது நிராகரிக்கப்பட்டதற்கு முழுமையான காரணங்கள் சொல்லப்படவில்லை. அதற்காக அமைக்கப்பட்ட குழுக்களில் உள்ளோரும் அனுபவம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். விவசாயிகளின் நிலையை முழுமையாக உணராத ஆட்களாகவே இருக்கிறார்கள்’ என்பது விவசாய ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.

மேலும், மார்ச் 2015-ம் ஆண்டு, மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஏக்நாத் காத்ஸ் (Eknath Khadse) 1,00,000 ரூபாயிலிருந்து 5,00,000 ரூபாய் வரை இழப்பீட்டுத் தொகையை அறிவித்திருக்கிறார். அனைத்து விவசாயிகளையும் உள்ளடக்கிய ஒரு ஆயுள் காப்புறுதிக் கொள்கைக்கான அறிவிப்புதான் அது. ஆனால், அந்த அறிவிப்பு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்பதுதான் வேதனை அளிக்கும் தகவல். அந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் விபத்துகள் என்று மட்டுமே உள்ளது. தற்கொலை என்ற சொல் இல்லை. அப்போதே காப்பீட்டுத் திட்டத்துக்கான நோக்கம் தோற்றுவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் விவசாய ஆர்வலர்கள். 

``மகாராஷ்ட்ராவில் உள்ள விவசாயிகளின் நிலைமைபோல, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நிலையும் மோசமாகிவிடுகிறது. கடன் தள்ளுபடி மற்றும் பயிர்க் காப்பீடு ஆகியவை செயல்படுவதாகத் தெரியவில்லை. குடும்பத்தில் இறந்துபோன விவசாயிக்காக இழப்பீட்டுத் தொகை கோரினால், அதன் பெரும்பான்மையாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மகாராஷ்ட்ராவின் சாங்லி மாவட்டத்தில் காவல்துறையினரிடம் ஆர்.டி.ஐ தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 2011 ஜனவரி முதல் அக்டோபர் 2015 வரை 1,988 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆனால், கடன் சுமையால் 39 விவசாயிகள் மட்டுமே இறந்திருக்கின்றனர். என்று தகவல் கொடுக்கிறது. அந்தக் 39 குடும்பங்களில் 18 குடும்பங்கள் மட்டுமே இழப்பீட்டுத் தொகை பெற்றிருக்கின்றன. மீதமிருக்கும் விவசாயிகளின் தற்கொலைகள் மனநலக் குறைபாடு, குடும்பப் பிரச்னை மற்றும் மதுப்பழக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இழப்பீடு வழங்கும்போதும் இந்தக் காரணங்களைச் சொல்லி இழப்பீடு வழங்குவது தடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுபோக இத்தனை விவசாயிகள் தற்கொலை நடந்தும் மாநில அரசோ, மத்திய அரசோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கைக்கட்டி வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கின்றன. விவசாயிகள் தற்கொலை செய்தாலும் அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்’’ என்கிறார் சமூக நல ஆர்வலர் ஜிதேந்திர கட்ஜ். 

கடந்த 4 ஆண்டுகளில் மகாராஷ்ட்ராவில் தற்கொலை செய்து இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை குறைந்திருக்கிறது. விவசாயிகளுக்காக எந்த ஒரு நடவடிக்கையும் மகாராஷ்ட்ர அரசோ, மத்திய அரசோ எடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதையெல்லாம் உணர்ந்து அரசு செயல்படுவதுதான் எப்போது என்று தெரியவில்லை. இந்தியாவின் முதுகெலும்பை இனி வரப்போகும் அரசாவது கவனிக்க வேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close