அமிர்தசரஸ் தொகுதியில் களமிறங்கும் ஹர்பஜன்? - பேச்சுவார்த்தை நடத்தும் பா.ஜ.க | BJP talks with Harbhajan Singh to field him from the Amritsar Lok Sabha poll

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (15/03/2019)

கடைசி தொடர்பு:14:10 (15/03/2019)

அமிர்தசரஸ் தொகுதியில் களமிறங்கும் ஹர்பஜன்? - பேச்சுவார்த்தை நடத்தும் பா.ஜ.க

அமிர்தசரஸில் பா.ஜ.க சார்பில் போட்டியிட, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. 

ஹர்பஜன்

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என மாநில கட்சிகள் முதல் தேசியக் கட்சிகள் வரை அனைவரும் பரபரப்பாகச் செயல்பட்டுவருகின்றனர்.  

இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். அவ்வப்போது ஐபிஎல் போட்டிகளிலும்,  இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு கமென்ட்ரி (commentary) யும் செய்துவருகிறார்.  இவர், பஞ்சாப்பின் ஜலந்தரை சொந்த ஊராகக்கொண்டவர். இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் தன் சொந்த மாநிலத்திலேயே போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஹர்பஜன் வீட்டு கதவைத் தட்டியுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நாடுமுழுவதும் பா.ஜ.க சார்பாகப் போட்டியிடுபவர்களின் பட்டியல் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பஞ்சாப், அமிர்தசரஸில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவதற்குத் தகுதியான மற்றும் பிரபலமான  உள்ளூர்  வேட்பாளர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பஞ்சாப்பை சொந்த மாநிலமாகக்கொண்ட கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை பா.ஜ.க சார்பில் அமிர்தசரஸ் தொகுதியில் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஹர்பஜன் சிங் பிரபலமானவர், எளிதில் இளைஞர்களைக் கவரக்கூடிய கிரிக்கெட் வீரர். அதனால், அவர் பஞ்சாப்பில் போட்டியிட்டால் எளிதில் வெற்றிபெறலாம் என பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

“ பா.ஜ.க-வை சேர்ந்த எந்தத் தலைவரும் என்னை சந்திக்கவில்லை. அரசியலில் சேர இது சரியான நேரமாக இருக்குமா என எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நான் அரசியலில் சேர என் மனத்தை தயார்படுத்திக்கொண்டாலும், தேர்தலில் போட்டியிட, அதற்கு நான் தயாராகவும் நேரம் மிகவும் குறைவாகவே உள்ளது” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 
 


[X] Close

[X] Close