மீதி சில்லறைக்காக 10 நாள் காத்திருப்பு... - 'ஆயிரத்தில் ஒருவன்' இந்த கேரள கண்டக்டர்! | conductor waits for 10 days to give ticket balance of Rs 1868 to his passenger

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (16/03/2019)

கடைசி தொடர்பு:19:50 (16/03/2019)

மீதி சில்லறைக்காக 10 நாள் காத்திருப்பு... - 'ஆயிரத்தில் ஒருவன்' இந்த கேரள கண்டக்டர்!

ழக்கமாக, பஸ் கண்டக்டர்களிடம் சில்லறை வாங்க நாம் படாத பாடு பட்டிருப்போம். எவ்வளவோ செலவழித்தாலும், பஸ் கண்டக்டர்களிடம் 5 ரூபாயை  விட்டுவிட்டுச் செல்ல நமக்கு மனம் வராது.  பஸ் கண்டக்டர் நம்மைக் கடந்து செல்லுகையில் எல்லாம்,  நமக்கு சில்லறை தருவாரா என்று அவரையே பார்த்துக்கொண்டிருப்போம். அப்படியே தரவில்லையென்றாலும், இறங்கும்போது சில்லறையை வாங்கிவிட்டே நகருவோம். பஸ் கண்டக்டர்கள் மீதான நம் பார்வை அப்படி.  சமீபத்தில், தமிழகத்தில் பேருந்தில் இறந்து போன பெண்ணின் சடலத்தை, சாலை ஓரத்தில் இறக்கிவிட்டுச் சென்ற கண்டக்டர்களும் உண்டு. தமிழகத்தில் கண்டக்டர்கள் இப்படியிருக்க, கேரளாவில் பயணி ஒருவர் விட்டுச்சென்ற பணத்தைக் கொடுப்பதற்காக 10 நாள்களாக கண்டக்டர் ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார். 

கேரளா கண்டக்டர் நேர்மை

கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் இருந்து நாகர்கோவிலுக்கு, கடந்த மார்ச் 6- ந் தேதி கேரள அரசுப் பேருந்து சென்றது. கொட்டாரக்கராவில், வயதான இரு பெண்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். அதில், ஒருவர் டிக்கெட்டுக்காக 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளார். கண்டக்டர் லிவின், பெண்மணிக்கு டிக்கெட்டை கொடுத்துவிட்டு, 'பேருந்தில் இருந்து இறங்கும்போது மீதியை வாங்கிக் கொள்ளுங்கள்'  என்று கூறி டிக்கெட்டின் பின்னால் எழுதிக்கொடுத்துள்ளார். பேருந்து, தாம்பனூர் என்ற இடத்தை வந்ததும், அந்தப் பெண்கள் இறங்கிச் சென்றுவிட்டனர். மீதிப் பணத்தை வாங்காமலேயே சென்றுவிட, லிவினும் மறந்துவிட்டார். கணக்குப் பார்த்தபோது, ரூ.1.868 அதிகமாக இருந்தது. அப்போதுதான் லிவினுக்கு ஒரு பெண்மணிக்கு மீதிப் பணம் கொடுக்காமல்போனது நினைவுக்குவந்தது. 

கண்டக்டர் பேஸ்புக் பதிவு

வருத்தமடைந்த அவர், இதுகுறித்து ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டார். ஆனால், அந்தப் பெண்மணி வரவே இல்லை. மேலும், டிக்கெட் இல்லையென்றாலும் பரவாயில்லை உரியவர்கள் வந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டும், யாரும் வரவில்லை. கடந்த 10 நாள்களாக யாரும் வராததையடுத்து, கேரள போக்குவரத்துக்கழக கொட்டாரக்கரா கிளையில் யூ.ஆர்.பி கணக்கில் அந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. பணம் செலுத்தியதற்கான ரசீதையும் புகைப்படம் எடுத்து லிவின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

சம்பந்தப்பட்ட பெண்மணிகளிடம் பணத்தை ஒப்படைத்தால் மட்டுமே தன் மனம் ஆறும் என்று லிபின் காத்திருக்கிறார். கேரள அரசு போக்குவரத்துக்கழக விதிகளின்படி, சம்பந்தப்பட்டவர்கள் 30 நாள்களுக்குள் மீதிப் பணத்தை வாங்கிவிட வேண்டும். இல்லையென்றால், அந்தப் பணம் போக்குவரத்துக்கழகத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும். 

கண்டக்டர் லிவினின் நேர்மை சோஷியல் மீடியாவில் அவரை ஹீரோவாக்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close