``ஐ.ஐ.டி மாணவர் டூ சர்ஜிக்கல் ஸ்டிரைக்” -யார் இந்த மனோகர் பாரிக்கர்? | who is Manohar Parrikar

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (18/03/2019)

கடைசி தொடர்பு:09:30 (18/03/2019)

``ஐ.ஐ.டி மாணவர் டூ சர்ஜிக்கல் ஸ்டிரைக்” -யார் இந்த மனோகர் பாரிக்கர்?

ஐ.ஐ.டியில் படித்த இந்தியாவின் முதல் எம்.எல்.ஏ என்ற பெருமையுடன் கோவா சட்டமன்றத்துக்குள் நுழைந்தவர் மனோகர் பாரிக்கர்

மனோகர் பாரிக்கர்

கோவாவில் உள்ள மபுஸா மாவட்டத்தில் 1955-ம் ஆண்டு பிறந்தவர் மனோகர் பாரிக்கர். மார்கோவில் உள்ள லயோலா பள்ளியில் தொடக்க கல்வியைக் கற்றார். பின் மும்பை ஐ.ஐ.டியில் பொறியியல் படிப்பை முடித்தார். ஐ.ஐ.டி நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த காலகட்டத்திலே ஐ.ஐ.டி மாணவராக இருந்தவர். இதனிடையேதான் பள்ளியில் படிக்கும்போதே, 1970-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பாரிக்கர், அதில் இணைந்தார். பின்னர் தொழில் ஒன்றை நடத்தி வந்த அவர், வட கோவா ஆர்.எஸ்.எஸ் யூனிட்டில் செயல்பட்டு வந்தார். ராம்ஜன்ம பூமி இயக்கதிலும் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமான பா.ஜ.க-வில் இணைந்தார். கோவாவில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட 4 பேர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தனர்.  அதன்படி 1994-ம் ஆண்டு முதல் முதலாக எம்.எல்.ஏ-வாக தேர்வானார் பாரிக்கர்.

அமைச்சர்

கோவா சட்டமன்றத்துக்குள் எம்.எல்.ஏ-வாக நுழைந்த முதல் ஐ.ஐ.டி மாணவர் பாரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல கோவா சட்டமன்றத்தில் 1999-ம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் வரை எதிர்கட்சித்தலைவராக இருந்தார். இதையடுத்து, அடுத்த வருடமே (2000-ம் ஆண்டு) நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக கோவா முதல்வரானார் மனோகர் பாரிக்கர். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தவரும் இவரே. 2014 -ம் ஆண்டு தேர்தலில் வென்று பிரதமரான மோடி இவருக்கு பாதுகாப்புத் துறையை கொடுத்து அழகுபார்த்தார். 2017 வரை அந்தப் பதவியில் நீடித்தார் பாரிக்கர். இவர் அமைச்சராக இருந்தபோதுதான் `சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தப்பட்டது. பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அவர் மாநில அரசியலுக்குத் திரும்பினார்.

மனோகர்

அதன்படி, 2017-ம் ஆண்டு கோவா முதல்வராக மீண்டும் பா.ஜ.க தலைமையால் நியமிக்கப்பட்டார்.  2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அப்போதிருந்தே தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். சிகிச்சைக்காக அமெரிக்காவும் சென்று வந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். இவர் சிகிச்சையில் இருந்தபொழுது மூத்த அமைச்சர்கள்தான் ஆட்சிக்கு பொறுப்பாக இருந்தனர். முழுநேர முதல்வர் வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால், அவர் சிகிச்சையிலிருந்தபோதும், அவரையே பா.ஜ.க முதல்வராக வைத்திருந்தது.

பாரிக்கர்

கோவா மாநிலத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 63. இவரின் மனைவியும் புற்றுநோயால் உயிரிழந்தார். எளிமையான முதல்வர் என்று அறியப்பட்டவர். ``இதைச் சொல்வதற்கான தைரியம் எனக்கு உண்டு. ஒருமுறை நீங்கள் எம்.எல்.ஏவாகவோ, எம்.பியாகவோ இருந்துவிட்டால் போதும். அது போதை தரக்கூடியது. உங்களால் மற்ற வேலைகளைப் பார்க்கவே முடியாது'' என்றவர். எம்.எல்.ஏ, ராஜ்யசபா எம்.பி, முதல்வர், மத்திய அமைச்சர் என பல முகங்களையும் கொண்டவர் இன்று காலத்தோடு கலந்துவிட்டார்.