‘அந்த இடத்துக்குப் போகவே ஒரு நாள் ஆகும்..!’- ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக ரிஸ்க் எடுக்கும் தேர்தல் ஆணையம் | Election Commission to undertake day long trek  for lone voter

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (18/03/2019)

கடைசி தொடர்பு:14:21 (19/03/2019)

‘அந்த இடத்துக்குப் போகவே ஒரு நாள் ஆகும்..!’- ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக ரிஸ்க் எடுக்கும் தேர்தல் ஆணையம்

இந்தியா – சீனா எல்லையில் அமைந்துள்ள ஒரு மலைக்கிராமத்தில், ஒரே ஒரு வாக்காளருக்காகத் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை உணர்ச்சியை அனைவரும் பாராட்டிவருகின்றனர். என்ன விஷயம் என்பதைப் பார்ப்போம்.

மலோகம்

அருணாசலப்பிரதேச மாநிலம், அஞ்சவ் மாவட்டத் தலைநகர் ஹயுலியாங்கிலிருந்து 39 கி.மீ தொலைவில் மலோகம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, வெகு சில குடும்பங்கள் மட்டுமே தற்போது வசிக்கின்றன. பலர், பிழைப்பு தேடி புலம்பெயர்ந்துவிட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. வெகு சில குடும்பங்களே இருப்பதால், இங்கிருப்பவர்கள் அனைவரும் பக்கத்து ஊரில் உள்ள வாக்குச்சாவடிக்குத் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டனர்.

2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, மலோகம் வாக்குச்சாவடியில் 39 வயது பெண் சொகேலா மற்றும் அவரது கணவர் ஜனிலும் ஆகிய இரண்டு வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். ஜனிலும் வேறு சாவடிக்குத் தன் பெயரை மாற்றிக்கொண்டார். ஆனால், சொகேலாவின் பெயரை மாற்றுவதில் தாமதாகிவிட்டதால் மாற்றாமல் விட்டுவிட்டார். தற்போது , மலோகம் கிராம வாக்குச்சாவடியில் சொகேலா பெயர் மட்டுமே பதிவாகியுள்ளது. ஒரே ஒரு வாக்காளர் இருந்தாலும் கடமையை செய்ய வேண்டும் என்பதில் இந்தியத் தேர்தல் ஆணையம் தீர்க்கமாக உள்ளது. மலோகம் கிராமத்துக்குச் செல்வது அவ்வளவு சுலபமில்லை. கரடுமுரடான மலைப்பாதைகளைக் கடந்துசெல்ல வேண்டும். மலோகம் கிராமத்தினுள் வாகனங்கள் செல்ல இயலாது. நடந்துதான் செல்ல வேண்டும். மலோகம் கிராமத்தினுள் வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன.  தேர்தல் அதிகாரிகள் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு நடந்தே செல்ல உள்ளனர்.

தேர்தல் ஆணையம்

இதுகுறித்து துணை தலைமைத் தேர்தல் அதிகாரி லிகென் கோயு பேசுகையில், ‘‘வாக்குப்பதிவு தினத்தன்று தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் மலோகம் வாக்குச்சாவடிக்கு முந்தைய நாளே புறப்பட்டுவிடுவார்கள். காரணம், அங்கு செல்லவே ஒரு நாள் ஆகும். வாக்குப்பதிவு தினத்தன்று, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அங்கு இருப்பார்கள். சொகேலா, தனக்கு வசதியான நேரத்தில் வந்து வாக்களித்துவிட்டுச் செல்லலாம்.  விரைந்துவந்து வாக்களிக்கும்படி அவரை நாங்கள் அவசரப்படுத்த மாட்டோம்’’ என்றார் உறுதியாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க