கடைசி நேரத்தில் சிறைத்தண்டனையிலிருந்து தப்பினார் அனில் அம்பானி! | Anil Ambani avoids jail

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (18/03/2019)

கடைசி தொடர்பு:20:30 (18/03/2019)

கடைசி நேரத்தில் சிறைத்தண்டனையிலிருந்து தப்பினார் அனில் அம்பானி!

சில விஷயங்களை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். அண்ணன், இந்தியாவின் முன்னணிப் பணக்காரர். அவருடைய உடன்பிறந்த தம்பியோ, திவாலான நிறுவனத்துக்கு சொந்தக்காரர். ஆம், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எரிக்சன் நிறுவனத்திடம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெற்ற கடன் தொகையை திரும்பிச் செலுத்தாததால், அதன்மீது வழக்குத் தொடுத்தது எரிக்சன். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிலுவைத் தொகையான 462 கோடியை மார்ச் 19, 2019 தேதிக்குள் செலுத்தாவிட்டால், அனில் அம்பானி 3 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் கொடுத்த காலக்கெடு நாளையோடு முடிவுக்குவருகிறது.

அனில் அம்பானி

இதையடுத்து, பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட அனில் அம்பானி, 118 கோடிவரை திரட்டி, உச்ச நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தார். இந்நேரத்தில், வருமான வரித் துறையிடமிருந்து வந்த ரீஃபண்ட் தொகை ரூ.260 கோடியைச் செலுத்தி, மேலும் சுமையைக் குறைக்கப்பார்த்தால், அந்த ரீஃபண்ட் தொகையை விடுவிக்க அவரது நிறுவனத்துக்குக் கடன் கொடுத்த வங்கிகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் எஸ்.பி.ஐ வங்கி மறுத்துவிட்டது. 

இந்த பரபரப்பான சூழலில் இன்று, அந்தக் கடன் தொகை உச்ச நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. பணம் செலுத்தப்பட்டதை எரிக்சன் நிறுவனத்தின் வழக்கறிஞரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம், சிறைத்தண்டனையிலிருந்து கடைசி நேரத்தில் அனில் அம்பானி தப்பியுள்ளார். இப்படி நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அனில் அம்பானியின் புதிய நிறுவனத்திற்கு, இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கான விமானங்களைத் தயாரிக்கும் பொறுப்பை வழங்கியது ஏன் என்பதுதான் இன்றுவரை மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.