3 மணி நேரச் சித்ரவதை... வெட்டி எடுக்கப்பட்ட நரம்புகள் -  கேரள இளைஞர் கொலையில் பகீர் வாக்குமூலம்! | kerala youth ananthu murder by brutally

வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (18/03/2019)

கடைசி தொடர்பு:18:39 (20/03/2019)

3 மணி நேரச் சித்ரவதை... வெட்டி எடுக்கப்பட்ட நரம்புகள் -  கேரள இளைஞர் கொலையில் பகீர் வாக்குமூலம்!

தகராற்றில் ஈடுபட்டவர்களை விலக்கிவிட்டதற்காக 21 வயது கேரள இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள இளைஞர் அனந்து கிரிஷ்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கொஞ்சிரவிலா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கிரிஷின் மகன் அனந்து கிரிஷ் (21). கடந்த வாரம் செவ்வாய் கிழமை (மார்ச் 12ம் தேதி) காணாமல் போனார். முதலில் அவர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் இருந்துள்ளனர். ஆனால், சிறிது நேரத்தில் அனந்துவைக் கடத்திக்கொண்டு செல்கிறார்கள் என அவரது நண்பர்கள் தெரிவிக்கவே மொத்தக் குடும்பமும் ஆடிப்போனது. உடனடியாக போலீஸிடம் சென்று நடந்ததைக் கூறி புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் (மார்ச் 13ம் தேதி) கரமானா என்னும் இடத்தில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரின் மரணம் கேரளாவில் அதிர்வை ஏற்படுத்தியது. காரணம் அவர் கொலை செய்யப்பட்ட விதம். 

அனந்து கொலை செய்யப்பட்ட கரமானா காட்டுப்பகுதி

அவர் உடல் மீட்கப்பட்டவுடன் வழக்கு விசாரணையை போலீஸார் துரிதப்படுத்தினர். அதன்படி, அவர் கொலைச் சம்பவத்தில் கொஞ்சிரவிலா பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் முக்கிய குற்றவாளியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்துப் பேசிய போலீஸார், விஷ்ணு ராஜ், வினீஷ் ராஜ் மற்றும் விஜய ராஜ் ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களின் கேங் அந்தப் பகுதியில் பிரபலமானது. 14 பேர் உள்ள இந்த கேங்கில் இருக்கும் பலருக்கு 25க்கு கீழ்தான் வயது. மது, கஞ்சா என எப்போதும் போதை மயக்கமாகவே இந்த கேங் இருக்கும். திருவனந்தபுரத்தில் இருக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும், இவர்களுக்கும் நிறைய தொடர்புகள் இருந்துள்ளன. இது தொடர்பாக சில வழக்குகளும் போடப்பட்டுள்ளன. இதுபோக சில அடிதடி, கொலை வழக்குகளும் இந்த கேங்கில் உள்ளவர்கள் மேல் உண்டு. கொலை செய்யப்பட்ட அனந்து கிரிஷ் இந்த கேங்குக்கு எதிர் கேங்கைச் சேர்ந்தவர்.

விஷ்ணு ராஜ், வினீஷ் ராஜ் மற்றும் விஜய ராஜ்

அனந்துவுக்கும், போதை கேங்கில் உள்ள விஜய ராஜுக்கும் ஏற்கெனவே படிக்கும் போதிருந்தே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் கொஞ்சிரவிலாவில் கோயில் திருவிழாவில் செண்டை மேளம் அடிப்பதில் சின்னத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அனந்து கிரிஷ்சண்டையில் ஈடுபட்டவர்களை விலக்கிவிட்டுள்ளார். அனந்து விலக்கிவிட்டதும் விஜய ராஜ் அவரை அடிக்கப் பாய்ந்துள்ளார். இதில் அனந்து அடித்ததில் விஜய ராஜுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் அனந்து மீது வன்மத்தில் இருந்துள்ளார் விஜயராஜ். இதன்பின்னர் தன்னுடைய நண்பனின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்பதற்காகத் தனது கேங்குடன் கரமானா சென்றுள்ளார்.

கொலைக்கு உதவியவர்கள்

அங்கு வழக்கம் போல போதை வஸ்துக்களுடன் ஆட்டம் பாட்டத்துடன் இருந்துள்ளனர். அப்போது தனக்கு நேர்ந்த சம்பவத்தை எடுத்துச் சொல்லியுள்ளார் விஜயராஜ். இதன்பின்னர் பிறந்தநாள் பார்ட்டியிலேயே அனந்துவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். போதையில் திட்டம்போட்டபடியே, கொலை செய்ய கிளம்பியுள்ளனர். அப்போது ஒரு கடையில் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்த அனந்துவை அவரது பைக்கிலேயே கடத்தி வந்துள்ளனர். கரமானாவில் பிறந்தநாள் பார்ட்டி நடந்த இடத்திலேயே அவரைக் கூப்பிட்டுச் சென்று கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்" என்றனர். கரமானாவில் அனந்து கொலை செய்யப்பட்ட இடம் ஆள் அரவமற்ற காட்டுப்பகுதி. அங்கிருந்து கத்தினால் கூட வெளியில் யாருக்கும் கேட்காது. இந்த இடத்தில்தான் விஜய ராஜின் கேங் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளது.

அனந்து கொலை செய்யப்பட்ட கரமானா காட்டுப்பகுதி

சம்பவத்தன்று மது அருந்தி ஆட்டம் போட்டுக்கொண்டே அனைவரும் கொலைக்கான சதித்திட்டம் தீட்டியுள்ளனர். பின்னர் அனந்தை தூக்கிவந்த பிறகு போதையில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக அவரை சித்ரவதைபடுத்தியுள்ளனர். சித்ரவதையால் அவர் அழுகவே, அழுகக் கூடாது என முதலில் அனந்தின் வாய்பகுதியைத் தாக்கியுள்ளனர். பின்னர் தேங்காயைக் கொண்டு தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதற்கெல்லாம் ஒருபடி மேலாகச் சென்று அனந்துவின் கை, கால் பகுதியில் சதைகளை வெட்டி எடுத்துள்ளனர். கூடவே, நரம்புப் பகுதிகளையும் வெட்டி எடுத்துள்ளனர். இப்படிக் கொடூரமாக அவரைச் சித்ரவதை செய்ததுடன், அவரின் உடம்பிலிருந்து ரத்தம் வெளியேறுவது, காயங்கள் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து ரசித்துள்ளனர். சிறிது நேரத்தில் ரத்தம் அதிகமாக வெளியேறி அவர் உயிரிழந்துள்ளார். 

கேரள இளைஞர் அனந்து கிரிஷ்

அனந்து உயிரிழந்ததை உறுதிப்படுத்தக்கொண்ட பிறகே அந்தக் கூட்டம் அங்கிருந்து நகர்ந்துள்ளது. பின்னர் அனந்து கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் இந்த கேங்கைப் பிடித்துள்ளனர். மொத்தம் 14 பேர் சேர்ந்து இந்தக் கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இவர்களில் எட்டுப் பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் எஸ்கேப் ஆகிவிட தற்போது அவர்களைத் தேடும் பணிகள் நடந்து வருகின்றன. முன்னதாக அனந்துவை எப்படிக் கொலை செய்யப்பட்டார் என்பதைக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கரமானா காட்டுப்பகுதியில் போலீஸார் முன்னிலையில் எடுத்துச் சொல்லும் வீடியோ கேரளாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க