ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு `முழு ஆதரவு’ - மம்தா பானர்ஜி | mamtha gave support for dmk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (19/03/2019)

கடைசி தொடர்பு:17:53 (19/03/2019)

ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு `முழு ஆதரவு’ - மம்தா பானர்ஜி

க்களவைத் தேர்தல்கள் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளன. தமிழகத்தில். மக்களவைத் தேர்தலும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பங்கேற்கும் முக்கியமான கட்சிகள் எல்லாம் ஏறக்குறைய தங்களின் கூட்டணிகளையும், வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ் உடன்  மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாயவதி திடீரென அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் தி.மு.கவுக்கு ஆதரவு

அதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்த்து மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிட உள்ளது. இந்த நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்காளத்தில் தனித்துப் போட்டியிடுகின்றது. சமீபத்தில் தொகுதிப் பங்கீட்டில் 41% பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது.

ஸ்டாலின், மம்தா பானர்ஜி

இந்த நிலையில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஹக்கிம் எழுதியுள்ள கடிதத்தில், `` ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும்படி மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் தி.மு.க , காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கும் முழு ஆதரவு அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்